சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகள் எந்தவிதமான சிரமும் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நேத்ரோதயா என்ற அமைப்பு கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் உள்ள பிறவகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தை சமூக நலத்துறை செயல்படுத்துகிறது. இதனால், பார்வை மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்ற வேண்டும். பிறவகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதைப் போன்றே, பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தது.
அப்போது அரசுத் தரப்பில், “தமிழக அரசு சார்பில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவிகளை பட்டியலிடப்பட்டது. மேலும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பொது வேலை வாய்ப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகள் மத்திய அரசு திட்டம் மூலம் வழங்கப்படுவதால் சமூக நலத்துறை மூலம் இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. பார்வை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை பெற மாவட்டம் தோறும் வருவாய் கோட்டாட்சியர்களை அதிகாரிகளாக நியமித்து, அவர்களின் தனிப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படும்” என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் பார்வை மாற்றுத்திறனாளிகள், எந்தவித சிரமும் இன்றி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன், வேலையில்லா பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்பு பெறும் தகுதி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளை மற்ற பிரிவு மாற்றுத் திறனாளிகளுடன் ஒப்பிட முடியாது என்ற போதும், உடல் நலம் பாதிக்கப்பட்ட, வயதான பார்வை மாற்றுத் திறனாளிகளை, மற்ற பிரிவினருக்கு இணையாக கருதுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.