சாப்பாடு என்றாலே பிடிக்கும். விதவிதமான உணவுகளை சாப்பிட விரும்புவோம். சைவம், அசைவம் என இருவகைகளிலும் பலவித உணவுகள் உள்ளன. சிலர் சைவம் விரும்பி சாப்பிடுவர். சிலர் அசைவம் விரும்பி சாப்பிடுவர். இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட இந்த ஒருமாதம் சைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். காளான், பன்னீர் வகைகளில் விதவிதமாக செய்து சாப்பிடலாம். அந்தவகையில் சிக்கன் 65 போல் காளான் 65 செய்து சாப்பிடலாம். காளான் 65 எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
சோள மாவு – 25 கிராம்
தனியா பொடி – 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி – 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் – தேவையான அளவு
சீரக தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
தயிர் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை
முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, தனியா பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி,
மிளகு தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு என எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் புளிப்பு சுவைக்கு கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம்.
அடுத்து, பொடி வகைகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் நறுக்கிய காளானை சேர்த்து ஒரு சேர பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
காளான் கலவை கெட்டியாக இருக்கும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்த காளானை போட்டு மிதமான சூட்டில் போட்டு எடுக்கவும். அவ்வளவு தான்
சுவையான காளான் 65 தயார். 10 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். காளான் 65 உடன் கூடுதல் சுவைக்காக வெங்காயம், எலுமிச்சை வைத்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil