கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் கடந்த சில மாதங்களாக வெளியிடங்களிலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நெல்லை மாநகர காவல்துறையினர் வழக்கமான போதைப்பொருள் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்காக நெடுஞ்சாலையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் சொகுசு ஆம்னி பேருந்து வந்தது. அந்த பேருந்தில் குட்கா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் வேகமாக வந்த அந்த பேருந்தை வழிமறித்தனர்.
ஆம்னி பேருந்தை போலீஸார் மறுத்தபோதிலும், அதைக் கண்டுகொள்ளாத பேருந்து ஓட்டுநர் வேகமாக ஓட்டிச் சென்றார். அதனால் கூடுதல் சந்தேகமடைந்த மேலப்பாளையம் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் அந்த பேருந்தை விரட்டிச் சென்றனர். ஆனாலும் அந்த பேருந்து நிற்காமல் வேகமாகச் சென்றது.
அதனால், சினிமா பாணியில் பேருந்தை போலீஸார் விரட்டினார்கள். நான்கு வழிச்சாலையில் சென்ற பேருந்து நாங்குநேரி டோல் கேட்டைக் கடந்து சென்றபோது போலீஸார் தங்கள் வாகனத்தை குறுக்கே நிறுத்தி மடக்கினார்கள். அதனால் பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் போலீஸார் சோதனையிட்டபோது, பயணிகளின் உடைமைகளை வைக்கும் லக்கேஜ் பகுதியில் மூட்டைகள் இருந்தன.
பேருந்தில் இருந்த மூட்டைகளின் உள்ளே தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது. மொத்தம் 10 மூட்டைகள் பேருந்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பேருந்தின் ஓட்டுநர்களான பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரன் அருண்குமார் மற்றும் உதவியாளர் பசவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரிலிருந்து கடத்திவரும் குட்காவை உள்ளூரில் விற்பதற்காக அதை வாங்க வந்திருந்த வியாபாரியான நாங்குநேரியை அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரையும் போலீஸார் கைதுசெய்தார்கள். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் காவல்துறையினர் நேல்லை மாநகரத்தில் உள்ள பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”குட்கா கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப் பொருள் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த சில வாரங்களாகவே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு நகரில் இருந்து குட்கா உள்ளிட்ட பொருள்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததால் உதவி கமிஷனர் தலைமையிலான போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது நிற்காமல் சென்ற ஆம்னி பேருந்தை விரட்டிப் பிடித்து சோதனையிட்டதில் 150 கிலோ குட்கா இருந்ததைக் கண்டுபிடித்தோம்.ஆம்பி பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.
குட்கா கடத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள், பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்காவை உள்ளூரில் விற்பனை செய்பவர்கள் என அனைவரையும் கண்டுபிடிக்கும் வகையில் தீவிர விசாரணை நடக்கிறது. குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்கள், விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு, கடத்தலில் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி விசாரித்து வருகிறோம். கைதானவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.” என்றார். பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்து, குடகா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது