செய்யூர்: மதுராந்தகம் அருகே டாக்டர் அறிவுரைபடி செல்போன் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்தபோது குழந்தை பரிதாபமாக இறந்தது. மதுராந்தகம் அருகே சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி (36). எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா (33). இந்நிலையில் புஷ்பா 2வதாக கர்ப்பமானார். இதனால் அவரை சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்து வந்தனர். அப்போது, டாக்டர்கள் புஷ்பாவுக்கு 19ம்தேதி பிரசவம் பார்க்கவேண்டும் என கூறியுள்ளனர்.
இதனிடையே, புஷ்பாவுக்கு வலி எடுத்ததால் நேற்று மதியம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மருத்துவர்கள் யாரும் இல்லை. செவிலியர்கள் 3 பேர் மட்டும் இருந்துள்ளனர். இதையடுத்து, புஷ்பாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி பார்த்த செவிலியர்கள், பிரசவத்தில் பிரச்னை உள்ளது என கூறியுள்ளனர். மேலும் ஸ்கேன் ரிப்போர்ட்டை செவிலியர்கள் சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர், இங்கேயே சுகப்பிரசவம் பார்த்துவிடலாம் என புஷ்பாவின் பெற்றோரிடம் செவிலியர்கள் கூறியுள்ளனர்.
அதன்பிறகு புஷ்பாவுக்கு செவிலியர்கள் 3 பேரும் பிரசவம் பார்த்துள்ளனர். வெகுநேரம் ஆகியும் குழந்தை பிறக்காத நிலையில், மாலை 6 மணிக்கு தலைகீழாக கால்கள் மட்டும் முதலில் வந்துள்ளது. இதனால் பயந்துபோன செவிலியர்கள், டாக்டர் ஒருவருக்கு போன் செய்து வரும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர், செல்போன் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்க்கும்படி செவிலியர்களிடம் கூறியுள்ளார். அதன்படி செவிலியர்கள் புஷ்பாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை மட்டும் வெளியில் வரவில்லை.
இதனால் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து புஷ்பாவை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே புஷ்பாவின் குழந்தை பரிதாபமாக இறந்தது. டாக்டர்கள், செவிலியர்களின் அலட்சிய போக்கால், குழந்தை இறந்துவிட்டதாக பெற்றோரும், உறவினர்களும் கூறி சடலத்தை வாங்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் இன்று காலை ஆரம்ப சுகாதார நிலையம் எதிரேயுள்ள சூனாம்பேடு-மதுராந்தகம் நெடுஞ்சாலையில் அமர்ந்து புஷ்பாவின் பெற்றோர், உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூனாம்பேடு, மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில்ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குழந்தையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.