தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும் பல லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி நஷ்டத்தை ஏற்படுத்துவதும் தொடரையாதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து. மீன்பிடிக்கச் சென்ற நிலையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் நடுக்கடலில் வைத்து ஒரு படகையும் அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை காரை நகர் கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி வந்ததாக கூறி, சிறைப் பிடித்து விசாரணைக்காக யாழ்ப்பாணம் கொண்டு செல்கின்றனர்.
அண்டை நாடான இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிலையில், இந்தியா நிதி உதவி செய்வதோடு மட்டுமின்றி, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை இலங்கைக்கு உதவி செய்து அண்டை நாட்டுடன் நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆனால், இங்கு ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், தமிழக மீனவர்களின் விவகாரத்தில் ஸ்டாலின் அரசு அக்கறை காட்டுவதில்லை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் தமிழக மீனவர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.
இதனால் கடந்த காலங்களை காட்டிலும், இந்த ஒரு வருட காலமாகவே தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே திமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.