சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க மூன்று விதமான சுவிட்ச் போர்டுகளை வடிவமைத்துள்ளார்.
மானாமதுரை கண்ணார்தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம் (65). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், 40 ஆண்டுகளாக எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சாதனங்களை வடிவமைத்து வருகிறார்.
மழைக்காலங்களில் மின் கசிவால் மின்சாரம் தாக்கி சிலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தடுக்கும் வகையில் தண்ணீருக்குள்ளேயே இயங்கும் சுவிட்ச் போர்டு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அதேபோல், பிளக் பாய்ன்ட்டில் இரும்புக் கம்பி போன்ற மின் கடத்தும் பொருட்களைப் பொருத்தினாலும்
மின்சாரம் தாக்காத வகையில் மற்றொரு சுவிட்ச் போர்டை வடிவமைத்துள்ளார். இதில் மின்சாதனப் பொருட்களின் பிளக்கைப் பொருத்தினால் மட்டுமே மின்சாரம் வரும். பிளக்கை கழற்றிவிட்டால் மின்சாரம் வராது. மேலும் மொபைல் சார்ஜருக்கென்று ஒரு சுவிட்ச் போர்டையும் வடிவமைத்துள்ளார்.
அதில் குறைந்த அளவே மின்சாரம் வருவதால் குழந்தைகள் தொட்டாலும் மின்சாரம் தாக்காது. ஆனால், இந்த போர்டில் மற்ற மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த முடியாது.
இதுகுறித்து சதாசிவம் கூறியதாவது: நான் வடிவமைத்த சுவிட்ச் போர்டுகளை பயன்படுத்தினால், மின்கசிவுக்கு வாய்ப்பே இல்லை. இதனால் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும். இந்த சுவிட்ச் போர்டுகளால் மின் செலவும் குறையும்.
தற்போது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அவரவரே தயாரித்துக் கொள்ளும் வகையில் மின் சாதனத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.