மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் இன்று அதிகாலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் பதிவானதால், தலைநகரில் பாதிப்பு எதுவும் இல்லை.
மெக்சிகோவில் கோலிமா என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு பதிவானதாக கூறப்படுகிறது.
இதில் கட்டிடங்கள் பல கடுமையாக ஆடியதாகவும், பல இடங்களில் சிறு சிறு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மெக்சிகோவில் கோலிமா எல்லையோர பகுதிகள் பொதுவாக அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் பகுதிகள் ஆகும்.
இங்கு கடந்த 2017ல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலர் பலியானார்கள். அதன்பின் அங்கு மீண்டும் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பதிவாகி உள்ளது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 400 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 15 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருடத்தில் ஏற்பட்டதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது. மெக்சிகோ உள்ள கோலிமாவில் கடந்த 1985ல் இருந்து 2017 வரை அடுத்தடுத்து பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலிமா, மிசோகான் ஆகிய பகுதிகள் ரிங் ஆப் பயர் எனப்படும் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் உள்ளன. பசிபிக் கடலில் அடுக்குகள், அருகில் உள்ள மற்ற நில அடுக்குகளை சந்திக்கும் பகுதிகள் இந்த நகரம் அமைந்து உள்ளது.
இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 1985ம் ஆண்டு இங்கு 8.1 ரிக்டர் அளவில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 10,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் 2017ல் இங்கு 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 370 பேர் பலியானார்கள்.
இந்த முறை அதே இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக தற்போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.