ஹைதராபாத், ”விமான நிறுவனங்கள், உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்,” என, ‘இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு, தெலுங்கானா அமைச்சர்ராமாராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
அதிருப்தி
இங்குள்ள விஜயவாடாவில் இருந்து ஹைதராபாதுக்கு, இண்டிகோ நிறுவன விமானத்தில் ஒரு பெண், சமீபத்தில் பயணித்தார். அவருக்கு தெலுங்கு மட்டுமே தெரியும். விமானத்தில் இருந்து வெளியேறும் கதவு அருகே அமர்ந்திருந்த அந்த பெண்ணை, அவருக்கு ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை என்ற காரணத்துக்காக, வேறு ஒரு இருக்கைக்கு, விமான ஊழியர்கள் மாற்றினர். இது குறித்து அந்த பெண், சமூக வலைதளத்தில் தன் அதிருப்தியை பகிர்ந்திருந்தார். இதையடுத்து, தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் கூறியதாவது:விமான நிறுவனங்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
அணுகுமுறை அவசியம்
சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு விமானங்களை இயக்கும்போது, அந்தந்த மாநில மொழி தெரிந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும். போட்டி நிறைந்த இந்த உலகில் இதுபோன்ற அணுகுமுறை அவசியம். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து இண்டிகோ நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியதாவது:வழக்கமாக விமானத்தின் கதவு அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணியர், தானாக முன்வந்து கதவை இயக்குவது, எதிர்பாராத அவசரகால சூழ்நிலையை நிர்வகிப்பது ஆகியவற்றில் பணியாளர்களுக்கு உதவ வேண்டும். இதற்கு தகவல்தொடர்பு அவசியம். இதன் காரணமாகவேஅந்த பெண்ணின் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி, அனைத்து மொழிகளுக்கும் எங்கள் நிறுவனம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நம் நாடு பன்முகத் தன்மை உடையது என்பதை தெரிந்து, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறோம்.அனைத்து பகுதிகளில் இருந்தும், பல்வேறு மொழி பேசுபவர்களையும்பணியாளர்களாக நியமித்து வருகிறோம். இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement