ஜோத்பூர்: ராஜஸ்தானில் அரசு மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவராக இருப்பவர் ராஜ்னீஸ் கால்வா. இவர் தனது காரில் நாய் ஒன்றை கயிறால் கட்டி காரை வேகமாக ஓட்டி செல்கிறார். இதனை பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் காரின் வேகத்துக்கு நாயால் ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் நாயின் முன்கால்களில் ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. கயிறு இறுக்கியதால் கழுத்திலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் காரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் சிலர் நாயை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சாஸ்திரி நகர் போலீசார் மருத்துவர் ராஜ்னீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து நாய்கள் இல்ல அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் நாயை மீட்டுள்ளனர். மேலும் அவர்கள் காவல்துறை மருத்துவருக்கு சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டி உள்ளனர். சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது இரண்டு மணி நேரத்திற்கு பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.