ராமராஜனிடம் கமல் கேட்ட அந்த கேள்வி: ராதாரவி கூறிய சுவாரஸ்ய கதை

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அச்சுராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார்.. சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். இந்தப்படத்தின் பாடல்களை சினேகன் மற்றும் விஜேபி ஆகியோர் எழுத. இவர்களுடன் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் முதன்முறையாக இந்த படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.

இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன், இயக்குனர் சந்தானபாரதி, கவிஞர் சினேகன், கும்கி-2 பட கதாநாயகி ஷ்ரத்தா ராவ், பாக்ஸர் பட கதாநாயகி ஆர்யா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ராதாரவி பேசும்போது, “இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன். அதுதான் நடந்தது. அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன். ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது படங்கள் அந்த இருவரின் படங்களை விட நன்றாக ஓடின. ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது.

ஒருமுறை நடிகர் கமல் விமானநிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல் தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம். ஆனால் இப்போதும் அதேபோன்ற ஹேர்ஸ்டைலுடன் தான் காட்சியளிக்கிறார். அவருக்கு மனசு சுத்தம். அதனால் தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன். வெளியூர் செல்லும்போது மதுரைப்பக்கம் எங்கோ ஒரு கிராமத்தில் ராமராஜன் ரசிகர் மன்றம் என்கிற போர்டை பார்த்தபோது, இவர் அழியமாட்டார்.. இவரை அழிக்க முடியாது என்று அருகில் இருந்தவரிடம் கூறினேன். நான் இப்படி சொல்வது ஏனென்று சாமான்யனுக்கு புரியும். 
 
இயக்குநர் ராகேஷ் இதற்கு முன்பு இயக்கிய மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். இப்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இந்த படத்தில் ஏழு நாட்கள் வேலை இருப்பதாக கூறியுள்ளார். எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்” என்று பேசினார்.

மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன் பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் தயாரிக்கும் படங்கள் மலேசியாவிலும் வெளியாகி வருகின்றன. அரசியல், தேர்தல் காரணமாக பிஸியாக இருப்பதால் திரைப்படங்களை பார்க்க முடியவில்லை. ஆனால் சமீபத்தில் என் மனைவி இவர்கள் தயாரிப்பில் வெளியான மஹா என்கிற படத்தை பார்த்துவிட்டு வந்து, கட்டாயம் நீங்களும் பாருங்கள் என்று என்னை வலியுறுத்தினார். அந்த அளவுக்கு நல்ல படங்களாக தொடர்ந்து தயாரிக்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார் 

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது, “ராமராஜன் 12 வருடம் கழித்து வருகிறாரே என்று கவலைப்பட தேவையில்லை.. காரணம் நெருஞ்சி அடிக்கடி பூக்கும்.. ஆனால் குறிஞ்சி 12 வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும். அவரும் குறிஞ்சி போல தான். இந்த வயதில் ஏன் நடிக்க வருகிறார் என கேள்வி எழுப்பும் சிலருக்கு நான் சொல்வது, நடிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல.. இவர் இனி தொடர்ந்து நடிப்பார்.. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற தன்னம்பிக்கையை இன்றுவரை விடாமல் தொடர்ந்து வருகிறார். அதற்காகவே அவரை பாராட்டலாம். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தான் பிஸியாக இருக்கும் சூழ்நிலையிலும் கூட, இந்த படத்திற்காக ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்றால், அவர் தீவிரமான ராமராஜன் ரசிகர் என்பதால் தான்” என பாராட்டி பேசினார். 

பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “ஒரு சில ஜாம்பவான்கள் கோலோச்சிக்கொண்டு இருந்த சமயத்தில் நான் சினிமாவில் நுழையாமல் போய்விட்டேனே என்றும் அவர்களுக்கு பாடல் எழுத முடியவில்லையே என்றும் வருத்தப்பட்டது உண்டு. அப்படிப்பட்டவர்களில் ராமராஜனும் ஒருவர் காரணம் அது ஒரு பொற்காலம். கிட்டத்தட்ட 3000 பாடல்களை எழுதி இருந்தாலும் ராமராஜனுக்கு எழுதவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. சோளக்காட்டில், வயல்வெளியில், பயணங்களில் என அவரது படத்தின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த எனக்கு என்னுடைய ஆசை நிராசை ஆகிவிடாமல் இன்று அவர் நடிக்கும் படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆசிர்வாதம் தான். தமிழ் சினிமாவில் ராமராஜன் என்பவருக்கான நாற்காலி இப்போதுவரை காலியாகவே இருக்கிறது. இதோ அவரே மீண்டும் அதில் வந்து அமர்ந்துகொண்டார்” என்று சிலாகித்து பேசினார். 

இந்த படத்தின் கதாசிரியர் கார்த்திக் பேசும்போது, “இந்த படத்தில் எனக்கு பல இன்ப அதிர்ச்சிகள் கிடைத்துள்ளன. என்னுடைய கதையில் ராமராஜன் சார் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை என்னால் இப்போதுவரை நம்ப முடியவில்லை” என்று தனது பிரமிப்பை வெளியிட்டார். 

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு திடீர் சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குனரும் நடிகருமான சந்தானபாரதி பேசும்போது, ‘முப்பது வருடங்களுக்கு முன்பு கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் இணைந்து நடித்தோம். தமிழ்நாட்டில் இப்போது என்னை மூலைமுடுக்கெல்லாம் பலருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் கரகாட்டக்காரன் படமும் அதில் ராமராஜனுக்கு வில்லனாக நடித்ததும் தான். இத்தனை வருடம் கழித்து அவர் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.