ஐ.எஃப்.எஸ் நிறுவனம் நிதி நிறுவன மோசடி குறித்த செய்திகள் வெளியாகி அதில் பணம் செலுத்தியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ்நாடு முழுவதுமே சமீபத்திய நிதி நிறுவன மோசடிகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கின்றன. இந்த நிலையில், மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாகக் கூறப்படும் நியோமேக்ஸ், க்ரீன்வெல்த், சென்ட்ரியோ ஆகிய குழுமங்கள் இரட்டிப்பாக தருவதாகக் கூறி பல லட்சங்களை மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த வினோத்குமார் நம்மிடம் பேசுகையில், “எனக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம். நான் சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு ராமநாதபுரம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த பிரிட்டோ, பட்டணம்காத்தான் கடம்பா நகரைச் சேர்ந்த முனியராஜ் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு `தனிநபர் கடன் பெற்று எங்கள் நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் மூன்று வருடங்களில் இரட்டிப்பாகப் பணம் கொடுக்கிறோம். மாதா மாதம் வட்டி தருகிறோம்’ எனக் கூறினர்.
அதை நம்பி ரூ.26 லட்சம் டெபாசிட் செய்தேன். அதன் பிறகு ஒரு வருடத்துக்கு மாதா மாதம் ரூ.37 ஆயிரம் வட்டியாக வங்கிக் கணக்குக்கு அனுப்பினர். ஆனால் ஒரு வருடத்துக்குப் பிறகு வட்டி பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். பணம் கேட்டால் முறையான பதில் வரவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் இந்த கம்பெனி மோசடியானது எனத் தெரியவந்தது. என்னைப்போல் இவர்களிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் கொடுப்பதை அறிந்தேன். அவர்களுடன் சேர்ந்து நானும் என்னுடைய பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடமும், எஸ்.பி-யிடமும் புகார் கொடுத்திருக்கிறேன். எங்களைப் போல் இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நிறைய பேர். அவர்களும் புகார் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
பாதிக்கப்பட்ட ராஜ்குமார் என்பவர் பேசும்போது, “நானும் சென்னையில் தான் பணியாற்றுகிறேன், எனக்கும் ராமநாதபுரம்தான் சொந்த ஊர். பட்டிணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த முனியராஜ்தான் எனக்கும் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கட்டினால் மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக பணம் வழங்குவதாகவும், அந்த மூன்று ஆண்டுகளுக்கு மாதா மாதம் 15 ஆயிரம் வட்டியை வங்கிக் கணக்கில் செலுத்துவதாகவும் கூறினார். நாங்கள் கொடுக்கும் பணத்தை எதில் முதலீடு செய்து எங்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினேன். அதன் பின்னர் என்னை மதுரையில் உள்ள அவர்கள் அலுவலகத்துக்கு கூட்டிச் சென்றனர். அங்கிருந்தவர்கள், `எங்களிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை உங்களுக்கு கொடுப்போம்’ என்று தெரிவித்தனர். மேலும் உச்சிப்புள்ளியில் ஒரே மாதிரி புதிதாக வீடுகள் கட்டப்பட்டிருப்பதை காண்பித்து தங்கள் நிறுவனம் சார்பில் நிலமாக வாங்கி வீடு கட்டி விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பதாகச் சொன்னார்கள்.
அதேபோல் விருதுநகரில் காடு போல் கிடந்த இடத்தை காண்பித்து, `இந்த இடமும் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கொடுத்த பணத்தில் வாங்கப்பட்ட இடம்தான். இன்னும் சில ஆண்டுகளில் இந்த இடத்தை சுற்றி மருத்துவமனை, பள்ளிகள், போக்குவரத்து என அனைத்து வசதிகள் வந்த பிறகு இடத்தின் மதிப்பு கூடும். அப்போது இந்த இடத்தை விற்று நீங்கள் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக வழங்குவோம், அல்லது வீட்டுமனை வழங்குவோம்’ என மூளைச்சலவை செய்தனர்.
அவர்கள் சொன்னதை நம்பி நானும் பணம் கட்ட தயாரானேன். வங்கி மூலம் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வதாக தெரிவித்தேன். ஆனால் அவர்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை கொடுக்காமல் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கை கொடுத்து அதற்கு பணத்தைப் பிரித்து அனுப்புமாறு தெரிவித்தனர். அதன்படி ரூபாய் 15 லட்சத்தை 20 நபர்களுக்கு அனுப்பினேன். கட்டிய பணத்துக்கு பாண்டு கொடுத்தார்கள். முதல் ஆறு, ஏழு மாதங்கள் மாதம் ரூ.22 ஆயிரம் வட்டி பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினர். அதன் பின்னர் பணம் செலுத்துவதை நிறுத்திக்கொண்டனர்.
இது குறித்து நிறுவனத்தை சார்ந்தவர்களிடம் கேட்டபோது, `நீங்கள் இந்த நிறுவனத்தில் புதிதாக ஆட்களை சேர்த்துவிட்டால்தான் உங்களுக்கு வட்டி பணம் கிடைக்கும், அதுமட்டுமின்றி சேர்த்துவிடும் நபர்கள் கொடுக்கும் பணத்தில் கமிஷன் கொடுப்போம்’ எனத் தெரிவித்ததால் நான் என் உறவினர்கள் பலரை அந்த நிறுவனத்தில் சேர்த்துவிட்டேன். அதன்படி என் உறவினர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் என சங்கிலித் தொடர்புபோல் பலர் அந்த நிறுவனத்தில் சுமார் 87 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளோம். இப்போது எங்கள் யாருக்கும் பணம் கொடுக்காமல் முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.
அதன் பிறகுதான் இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் கட்டி ஏமாந்துள்ளதாக தகவல் கிடைத்தது. அவர்களிடம் விசாரித்ததில் வாடிக்கையாளர்கள் முதலீடு மற்றும் கம்பெனி முதலீடு பற்றி எந்த ஒரு தகவலும் கம்பெனி வெப்சைட்டில் இல்லை என்பதும், வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகை பற்றி நியோமேக்ஸ் நிறுவனம் வருமானவரித்துறைக்கு தெரிவிப்பதில்லை எனவும், கம்பெனி பங்குதாரர், பங்குதாரர் பினாமி, பங்குதாரர் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படுவதும் தெரியவந்தது. இதுவரை இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ள ரூ.10 ஆயிரம் கோடியில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் நிறுவன பங்குதாரர்களின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டதாகவே கணக்கில் காட்டி, மோசடி செய்திருக்கின்றனர். எனவே எங்களை நம்பவைத்து பல லட்சங்களை ஏமாற்றிய நியோமேக்ஸ் நிறுவனத்திடமிருந்து எங்கள் பணத்தை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்துள்ளோம். பொதுமக்கள் யாரும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாற வேண்டாம்” என்றார்.
இந்த புகார் தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். “பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக நியோமேக்ஸ் நிதி நிறுவனம்மீது மூன்று பேர் புகார் அளித்துள்ளனர். அது தொடர்பாக முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
புகார் மனுவில் கூறப்பட்டிருக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நியோமேக்ஸ் ஏஜென்ட் முனியராஜிடம் பேசினோம். “ நாங்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ், ஹோட்டல்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், பள்ளிகள் நடத்தி நீண்ட ஆண்டுகளாக சமூக சேவையுடன் இந்தப் பணியை செய்து வருகிறோம். எங்கள் அலுவலகம் மதுரை காளவாசலில் இருக்கிறது. நாங்கள் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்கள் அல்ல. அவர்களிடம் புகார் கொடுக்க வேண்டாம், நேரில் வாருங்கள் பேசிக் கொள்வோம் எனக் கூறியும் என் பேச்சை கேட்காமல் புகார் கொடுத்திருக்கின்றனர்” என்றார்.