நாமக்கல் மாவட்டத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் முன்னிலை வகித்தார்.
பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் பதில் !
அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் காகிதமில்லா மின்- அலுவலகம் (e-office) நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், வாய்ப்புகள் ஆகியவற்றில் துறை அலுவலர்களின் கருத்துக்களை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் அரசு திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் என்ற தரவுகளை உடனுக்குடன் பெற்றிட முடியும். மேலும், இ-சேவை மையங்கள் மூலம் 200 ஆக இருந்து வந்த அரசின் சேவைகள் தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இனிவருங் காலங்களில் படிப்படியாக அரசின் அனைத்து துறை சேவைகளும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் முழுவதும் மின்- அலுவலகங்களாக மாற்றப்படும். நாமக்கல் போன்ற வளரும் மாவட்டங்களில், படித்த இளைஞர்களுக்கு திறன்களை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
தமிழக அரசு அறிவித்ததுபோல ஸ்மார்ட் கவர்னன்ஸ் என்பதை உள்ளடக்கி இதுபோன்ற மின்- அலுவலக திட்டங்களை இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் அரசு அலுவலகங்களில் காகிதங்கள் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு, அரசு பணியாளர்களுக்கு அவர்கள் பணிகளை விரைந்து செய்ய முடியும். கொல்லிமலையில் எளிதான இணைய தளம் மற்றும் தொலைபேசி சேவைக்காக 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம் அமைக்க, ஆதிதிராவிட நலத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வழிவு அனுப்பியுள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் வெகு விரைவில் 12,525 கிராமங்கள் பைபர் நெட் மூலம் இணையதள சேவையை பெற முடியும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் விரைவில் முடிவடையும்.
தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. இத்துறை 16-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
டிஜிட்டல் சேவைகள் வழங்குவதில் 17-வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தமிழகம் முன்னேறி நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில் எல்காட் மூலமாக ஐ.டி பார்க் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இந்த ஆய்வு கூட்டத்தில், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், நாமக்கல் மாவட்ட, அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.