விஜயவாடா: ஆந்திராவில் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது ‘ஹாயாக’ இயர்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒருகாலத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்தாலோ, ஆசிரியரை பார்த்தாலோ மாணவர்கள் பயபக்தியாக நடந்து கொள்வர். ஆசிரியர்களும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக பாவித்து, தேவைப்பட்டால் அவர்களை கண்டிக்கவும் செய்வர்.
பள்ளிக்கூடத்திற்கு வரும் பல மாணவர்களின் பெற்றோர்களே, தன் பிள்ளைகளை அடித்து கண்டித்து திருத்துமாறு ஆசிரியர்களிடம் கூறிச் செல்வது வழக்கமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் இத்தகைய கண்டிப்பு இருந்ததால் தான், மாணவர்கள் ஒழுக்கமாக வார்த்தெடுக்கப்பட்டார்கள். பிற்காலத்தில் சமூகப் பொறுப்புக் கொண்ட மனிதர்களாகவும் அவர்கள் மாறினர்.
அதிகரிக்கும் மாணவர்கள் அராஜகம்
ஆனால் தற்போது பள்ளிக்கூடங்களில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. மாணவர்களை கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களிடம் இருந்து பறிக்கப்பட்டதால் மாணவர்களின் அராஜகம் அதிகரித்துவிட்டது. ஆசிரியை பாடம் நடத்தும் போது அவரை சுற்றி நின்று நடனமாடுவது; ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுப்பது என மாணவர்களின் அட்டகாசங்களை படம்பிடித்து காட்டும் வீடியோ ஆதாரங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
கண்டிக்க ஆள் இல்லை…
அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களிடையே தற்போது மதுப்பழக்கமும், கஞ்சா பழக்கமும் அதிகரித்து விட்டது. எனினும், அவர்களை தட்டிக்கேட்கவும், கண்டிக்கவும் ஆள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது.
அதையும் மீறி மாணவர்களின் தவறுகளை ஆசிரியர்கள் தட்டிக்கேட்டாலோ, கண்டித்தாலோ அவர் மீது புகார் கொடுத்து அவரது வேலைக்கே உலை வைக்கும் மாணவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதனால் ஆசிரியர்களும் “நமக்கு ஏன் வம்பு, மாணவர்கள் எப்படி போனால் நமக்கென்ன?” என்கிற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
வகுப்பறையில் பாட்டு…
தற்போது விஜயவாடாவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் மாணவர்களின் வகுப்பறை ஒழுக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிள் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 11-ம் வகுப்பில் நேற்று காலை ஆசிரியர் ஒருவர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பில் இருந்த மாணவன் ஒருவன் செல்போனில் இயர்ஃபோன் மூலமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.
சரமாரி அடி உதை
அதனை கவனித்துவிட்ட ஆசிரியர், அந்த மாணவனிடம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்க, அந்த மாணவனும் அலட்சியமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், அந்த மாணவனை சரமாரியாக தாக்கினார். மேலும், அவனிடம் இருந்த செல்போனை பறித்து வீசி, அந்த மாணவனை காலாலும் எட்டி உதைத்தார்.
சஸ்பெண்ட்
ஆசிரியர் மாணவனை தாக்குவதை அங்கிருந்த மற்ற மாணவன் ஒருவன் தனது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டான். இந்த வீடியோ வைரலாக பரவியதால் மாணவனை அடித்த ஆசிரியருக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.