தெஹ்ரான்: ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாடு முழுவதும் பொது இடங்களில் சோதனை நடத்தி ஹிஜாப் அணியாத பெண்கள், முஸ்லிம் முறைப்படி ஆடை அணியாத பெண்களை கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒழுக்க நெறி பாடங்கள் கற்பிக்கப்படும்.
இந்நிலையில், ஈரானின் மேற்கில் அமைந்துள்ள குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி(22) கடந்த 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.
அப்போது சிறப்பு படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டி கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார்.
மாஷா அமினியின் மரணம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தெஹ்ரான், குர்திஸ்தான் மாகாணம் உட்பட நாடு முழுவதும் பெண்கள் சாலை, தெருக்களில் திரண்டு ஹிஜாபுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரான் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நகரங்களில் ஹிஜாப் எரிப்பு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. சிலர் சமூக வலைதங்களில் தங்கள் கூந்தலை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். போராட்ட வீடியோக்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன.
ஆடை நெறிமுறைகளை மீறும் பெண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்பது தெரிந்தும் ஈரான் பெண்கள் துணிச்சலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைப்புகள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தெஹ்ரான் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர். பெண்கள் மீதான ஆடைக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் அரசு அடக்கு முறைகளை ஏவிவிட்டு வருகிறது. சஹிஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். மேலும் பல இடங் களில் போலீஸார் தடியடி நடத்தியும் பெண்களின் எழுச்சியால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.