1,500 பவுன் நகை திருட்டு – ஊர் ஊராய் சுற்றிவந்த பட்டறை உரிமையாளர் கோவையில் கைது

1500 பவுன் நகையை திருடிக் கொண்டு ஊர் ஊராய் சுற்றி வந்த நகை பட்டறை உரிமையாளரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுஜித் மைட்டி (40). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவை வந்த இவர், செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு தொழில்ரீதியாக பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட இவர், சொந்தமாக நகைப்பட்டறை ஒன்றை ஆரம்பித்தார்.
இந்நிலையில், சுஜித் மைட்டியிடம் பலர் தங்க கட்டிகளைக் கொடுத்து ஆபரணங்களாக மாற்றி வாங்கி வந்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடங்கிய நிலையில், கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட சுஜித் மைட்டி அதில் பெட்டிங் (சூதாட்டம்) கட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு அதில் பணம் வர தொடங்கியது. பின்னர் அதில் அவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார்.
இதற்காக அவர் பலரிடம் வாங்கிய நகைகளை விற்று செலவுசெய்யத் தொடங்கினார். நாளடைவில் அவரிடம் தங்கத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்கத் தொடங்கினர். இதனால் அவர் ஒருவரிடம் வாங்கிய தங்கத்தை மற்றவரிடம் கொடுத்து சில நாட்கள் சமாளித்து வந்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல தங்கத்தைக் கொடுத்தவர்கள் அவரிடம் திருப்பிக் கேட்கத் தொடங்கியுள்ளனர். அப்போது அவர் தன்னிடம் இருந்த 2 கிலோ தங்கத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.
image
இதையடுத்து அவரிடம் தங்கக் கட்டிகளை கொடுத்தவர்கள் அவர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகையை கொடுத்து ஏமாந்த வடவள்ளியைச் சேர்ந்த கனகராஜ், செட்டி வீதியைச் சேர்ந்த குருசாமி, டவுன்ஹால் பகுதியைச் பிரகாஷ், ஜனா ஆகியோர் வெரைட்டி ஹால் போலீஸ் நிலையம் மற்றும் பெரியகடை வீதி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து 2 கிலோ தங்கத்துடன் தலைமறைவான சுஜித் மைட்டியை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தனிப்படையினர் அவரது செல்போன் எண்ணைக் கொண்டு டவரை ஆய்வு செய்தனர். அப்போது சுஜித் மைட்டி புதிய செல்போன் எண்ணில் டெல்லியில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த எண்ணை கண்காணித்தனர். இந்நிலையில், ரயில் மூலம் சுஜித் மைட்டி கோவை வருவதை உறுதி செய்த போலீசார் அவரை ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த 1,500 பவுன் நகையை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.