கரூர் ஆதிவிநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள், சேகர், ராஜம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியின் 24 வயது நிரம்பிய மகளான சௌமியா என்ற சபரிதான், அந்த பலே கில்லாடி லேடி. பி.காம் படித்துவிட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்த அவருக்கு, ஆடம்பரமாக வாழ ஆசை வந்திருக்கிறது. ஆனால், அதற்கு தான் பார்த்து வந்த வேலையில் கிடைத்த வருமானம் போதாமல் போக, அங்குதான் தனது ரூட்டை மாற்றிருக்கிறார்.
அதன்பிறகு, நடந்தவற்றை, காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“வறுமையான குடும்பத்தில் பிறந்த சபரி, வசதிவாய்ப்பாக வாழ ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக, வழி தேடியிருக்கிறார். இந்த நிலையில்தான், அரியலூரைச் சேர்ந்த சக்தி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அதன்பிறகு, அவரை பிரிந்த சபரி, 2019 க்கு பிறகு சொந்த வீட்டை விட்டும் வெளியேறியிருக்கிறார். அதன்பிறகு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தற்போது சென்னையில் பணியாற்றும் காவலர் சுரேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால், பெற்றோர் சௌமியா என்கிற சபரியின் நடவடிக்கை பிடிக்காமல் மகளே வேண்டாம் என ஒதுங்கி கொண்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்தபோது காவலர் சுரேஷின் உறவினரான சதீஷ் என்பவரிடம் அழகான பெண் ஒருவரின் புகைப்படத்தை காட்டி, ‘இவ எனக்கு தெரிஞ்சவதான். பேரு கவின். உனக்கு இவளை மணமுடிக்கிறேன்’ என்று ஆசை வார்த்தை காட்டி, அவர் மூலமாக பலரிடம் பணம், நகை என ஏமாற்றி வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. சுமார் ஒரு கோடி அளவுக்கு மதிப்பிலான, 124 பவுன் நகை, ரூ. 42 லட்சம் ரொக்கத்தை ஏமாற்றியிருக்கிறார். சுரேஷை கைகழுகவ நினைக்க, அதன்காரணமாக சதீஷ் கொடுத்த புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் பெறப்பட்ட புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பெயிலில் வெளியே வந்திருக்கிறார்..
அதன்பிறகு, ஈரோட்டை சேர்ந்த டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் சீனிவாசன் என்பவரை மூன்றாவது திருமணம் செயததோடு, சூலூர் பகுதியில் தங்கி இருந்தபோது, பலரிடம் அரசு வேலை பொய்யைச் சொல்லி, ரூ. 37 லட்சத்தை மோசடி செய்திருக்கிறார். அதேபோல், போத்தனூர் பகுதியில் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி, 37 பவுன் தங்கம் மற்றும் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு வழக்கில் சிக்கினார். இதனால், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த சபரி, அதன்பிறகு தனது சொந்த ஊரான கரூருக்கு வந்து, காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
அதோடு, காந்திகிராமத்தில் உள்ள பிரபல ஜோசியர் மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் தங்கியதோடு, ஜோதிடர் மூலமாக அவரின் உறவினர்கள் 8 பேர்களிடம், ‘அமைச்சர் செந்தில் பாலாஜி எனக்கு உறவினர். நான் சொன்னா, எதையும் செய்வார். அரசு வேலை, பணிமாறுதல்னு எது வேணும்னூ கேளுங்க. செஞ்சு தர சொல்றேன்’னு ஏகத்துக்கும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, ஒண்ணேமுக்கால் லட்சத்தை ஏமாற்றி வாங்கியிருக்கிறார். அதேபோல், யசோதா என்பவர் மூலமாக, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரிடம் அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ. 27,70,000 வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார்.
ஆனால், சொன்னபடி யாருக்கும் அரசு வேலையோ, பணிமாறுதலோ வாங்கி தரவில்லை. சபரி ஓர் ஏமாற்று பேர்வழி என்பதை உணர்ந்த பலரும் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் சாக்குப்போக்கு சொல்லி, சால்சாப்பு செய்தவர், அந்த பணத்தில் வெள்ளியணை வடக்குப் பகுதியில் ரூ. 7 லட்சத்தில் பிளாட் வாங்கியிருக்கிறார். அதோடு, பணம் கேட்டு வருபவர்களிடம் இருந்து தப்பிக்க, பகல் நேரத்தில் வீட்டில் இருப்பதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், இவருக்கு பணம் வாங்கி கொடுத்த யசோதாவிடம் பலரும் பணம் கேட்டு நெருக்க, அவரின் மகன் கண்ணனுக்கு சபரி காந்தி கிராமத்தில் இருப்பது தெரிந்ததும், கையும் களவுமாக பிடித்து வந்து, பசுபதிபாளையம் காவல் நிலையதில் ஒப்படைத்தார். அதற்குள், இந்த வழக்கை கரூர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட, கரூரைச் சேர்ந்த ஜனனி என்பவர் தனது கணவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக சபரி பணம் வாங்கிகொண்டு ஏமாற்றியதாக புகார் கொடுக்க, சபரி மீது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மகாலட்சுமி, இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறைக்கு அனுப்பியிருக்கிறார்.
ஆனால், நாலாவதாக கரூரைச் சேர்ந்த ஓர் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்துகொள்வதாக, ஏமாற்றி கடந்த ஞாயிறன்று நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடத்த இருந்தாராம். ஆனால், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, சபரி போட்டோவை காண்பித்து, அவரைப் பற்றி அந்த ஆட்டோ டிரைவர் விசாரிக்க போக, சபரியின் வண்டவாளங்கள் தெரியபோய், கடைசி நேரத்தில் அவரிடம் இருந்து தப்பித்ததாகச் சொல்றாங்க” என்றார்கள்.
இதற்கிடையில்,, சபரியின் தில்லாலங்கடி கைங்கர்யங்கள் குறித்து, அவரை விசாரணை செய்த போலீஸார் கதைகதையாக விவரிக்கிறார்கள். “இத்தனைப் பேரிடமும், ஒன்றரை கோடிக்கு மேல் ஏமாற்றியிருந்தாலும், பண விசயத்தில் தனது அக்கவுண்டில் ஒருரூபாயை கூட சம்பந்தப்பட்டவர்களை போட சொன்னதில்லையாம். தனக்கு தெரிந்தவர்கள் வங்கி கணக்குகளில் பணத்தை போடச் செய்து, அவர்கள் மூலமாக பணத்தை எடுக்கச் சொல்லி, வாங்கிகொள்வாராம். அவர்களுக்கும் கொஞ்சம் பணம் கொடுப்பாராம். அதோடு, அவரின் உண்மையான பெயர் சபரி, அனைத்து சான்றிதழ்களிலும் சபரி என்றுதான் உள்ளது. ஆனால், சௌமியா என்ற பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல், ராமநாதபுரத்தில் இருந்தபோது, இரண்டாவது கணவர் சுரேஷையும், அவரது உறவினர்களையும் ஏமாற்றி பணம் பறிக்க, இரண்டுமுறை கர்ப்பமானதாக நடித்து, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வைத்திருக்கிறார். அதற்காக, பலரிடம் பணம் பறித்திருக்கிறார். அதன்பிறகு, கர்ப்பம் கலைந்துவிட்டது என்று சொல்லி, எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார். அதேபோல், சூலூர் பகுதி மோசடி வழக்கில் அவர் மாட்டியபோது, அவரை போலீஸார் கையும் களவுமாக பிடித்துவிட்டனர். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஏக நாடகம் நடத்தி, 108 ஆம்புலன்ஸை வரவைத்து, அதில் ஏறி தப்பித்துவிட்டாராம். இப்படி ஏமாற்றி பறித்த பணத்தில் பிளாட் வாங்கி அதில் வீடு கட்ட நினைத்திருக்கிறார். அதோடு, அந்த வீட்டில் என்னென்ன பொருட்கள் வாங்கி வைக்கணும்னு ஒரு பேப்பரில் லிஸ்ட் எல்லாம் எழுதி வைத்திருந்தார். அதை பார்த்ததும், நாங்க அதிர்ச்சியாயிட்டோம்” என்றார்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் சுகுமாறன், “கைது செய்யப்பட்ட மோசடி இளம் பெண் சௌமியா என்கிற சபரி. இளம்வயதில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட்டுள்ளார். தனது 24 வயதில் மூன்று மத்திய சிறைகளில் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். அவர் வெள்ளியணை அருகே வாங்கிய ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிலத்தின் பத்திரத்தையும், 59 கிராம் தங்க நகைகளையும், ஒரு கிலோ அளவுக்கான வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளோம். .இதன் மூலம், சபரியிடம் பணத்தை இழந்த சிலருக்கு நீதிமன்றம் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரியை மீண்டும் விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தால் மோசடி செய்த மொத்த பணம் எங்கே வைத்துள்ளார் யாரிடம் கொடுத்து வைத்துள்ளார் என்பது குறித்து தெரியவரும். சபரியிடம் இனி யாரும் ஏமாறகூடாது என்பதே எங்களின் நோக்கம்” என்றார்.
ஆசையே அழிவுக்கான ஆரம்பம் என்பார்கள். சபரிக்கே அது நன்றாகவே பொருந்தி போயிருக்கிறது!.