கொல்கத்தா: மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து அதிரடி அரசியலை செய்து வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களாக அமைதியாக செல்வது அவரது பேச்சுக்களின் மூலம் தெரிகிறது.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மம்தா பானர்ஜி 3 வது முறையாக முதலமைச்சராக இருந்து வருகிறார். கடந்த முறை முதலமைச்சராக இருந்த சமயத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மம்தா பானர்ஜி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் காட்டமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதனால் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி இருப்பார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே மம்தா பானர்ஜி மத்திய அரசு மீதும், பாஜக மீதும் அதிக விமர்சனங்களை முன்வைப்பதில்லை. மாறாக சில ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக அம்மாநில அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி கைதுக்கு பிறகு.
டுவிஸ்ட் 1 – துணை ஜனாதிபதி தேர்தல்
இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரஸை விட அதில் அதிக ஆர்வம் காட்டியவர் மம்தா பானர்ஜி. உடனடியாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். அவரது கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் அவர் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கூடி மார்க்கரெட் ஆல்வாவை தேர்வு செய்தன. இதில் திரிணாமூல் காங்கிரஸ் அந்த தேர்தலில் ஒதுங்குவதாக அறிவித்தார் மம்தா பானர்ஜி.
டுவிஸ்ட் 2 – ஆர்.எஸ்.எஸ்.
கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி பேசிய மம்தா பானர்ஜி, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவர்களாக இருந்தது கிடையாது. பாஜக செய்யும் அரசியலை விரும்பாதவர்கள் பலரும் அந்த அமைப்பில் உள்ளனர். ஆர்.எஸ். எஸ் அமைப்பில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்.” என்றார். பாஜகவை மென்மையாக விமர்சித்தாலும் அதன் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ஐ மம்தா பாராட்டியது கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
டுவிஸ்ட் 3 – மஹுவா மொய்த்ரா
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற அவையில் தனது அனல் பறக்கும் பேச்சுக்களால் இந்திய அளவில் பிரபலமானவர். தொலைக்காட்சி விவாதங்கள், நேர்காணல்களிலும் இவரது பேச்சுக்கள் அதிகம் கவனிக்கப்படும். ட்விட்டரிலும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கடந்த மாதம் காளி என்ற ஆவண படம் தொடர்பாக மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது கட்சியின் கருத்தல்ல என மம்தா விளக்கமளித்தார். கடந்த சில நாட்கள் முன்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் உங்கள் தொகுதி பணியை மட்டும் கவனியுங்கள் என்று மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
டுவிஸ்ட் 4 – தாக்குதல்
கடந்த வாரம் மேற்கு வங்க அரசின் ஊழலை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி பாஜக பேரணி சென்றது. அங்கு போலீசார் மீது பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் போலீசார் ஒருவரை கட்டை மற்றும் கற்களை கொண்டு பாஜகவினர் கொடூரமாக ஓட ஓட விரட்டிப் பிடித்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏராளமான போலீசார் காயமடைந்து பொது சொத்துக்கள் சேதமடைந்தன. ஆனால், அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தவில்லை என்றும் அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
டுவிஸ்ட் 5 – மோடி
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூலமாக குறிவைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் நேற்று இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லை என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.