Tamil Nadu News: புதுச்சேரியை அடுத்து தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலினால் பள்ளிக் குழந்தைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
இதையடுத்து, காய்ச்சல், சளி அல்லது பிற அறிகுறிகளுடன் இருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து ஐந்து நாட்களாக, கோவிட்-19தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் குழந்தைகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி தமிழக அரசிடம் தெரிவிக்கின்றனர்.
இதை தொடர்ந்து பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸ், “பள்ளிக்குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள். மாணவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது அவசியம், அலட்சியம் காட்டாமல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்”, என்று கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் ‘ப்ளு’ காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்தவும், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுக” என்று தனது கோரிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil