HBD Mysskin: மிஷ்கினின் முதல் ரசிகர் ஒரு மதுரைக்காரர் – அவர் சொன்ன கமென்ட் என்ன தெரியுமா?

இன்று மிஷ்கினுக்குப் பிறந்தநாள். தொழில்நுட்பங்களைத் தாண்டி, கதை சொல்லியாக கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் இவர். `சித்திரம் பேசுதடி’, `நந்தலாலா’, `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, `பிசாசு’ எனப் படங்கள் ஒவ்வொன்றிலும் மன்னிப்பு, இரண்டாம் வாய்ப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை விதைத்தவர்.

“நான் பேன்ட், சட்டை போட்ட ஆண் பாட்டி. வாழ்நாள் முழுக்கக் கதை சொல்வேன்”, “150 ரூபாய் கொடுத்துப் படம் பார்க்கும் இந்தச் சமூகத்துக்கு நல்ல கதைகளை நான் யோசிக்கிறேன்”, “ஆண்டவனுக்குப் பிறகு அண்ணாந்து பார்க்கிறது, சினிமாத் திரையைத்தான்” என்றெல்லாம் சொல்லும் மிஷ்கின் குறித்து இன்னும் தெரியாத பக்கங்கள் இங்கே…

* இவரது ஒரிஜனல் பெயர் சண்முகராஜா என்றாலும், தஸ்தாயெவ்ஸ்கியின் கதையில் வரும் மிஷ்கினை தன் பெயராக மாற்றிக்கொண்டார். பிறந்தது காரைக்குடி, படித்தது திருப்பத்தூர், வளர்ந்தது திண்டுக்கல். தான் சினிமாவிற்கு வந்ததே மிகப்பெரிய விபத்து என்பார். உதவி இயக்குநர் ஆவதற்கு முன்னால், புத்தகக்கடையில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 72 தொழில்களில் வேலையில் இருந்திருக்கிறார். இயக்குநர்கள் கதிர், வின்சென்ட் செல்வா உட்பட பலரிடம் வேலை செய்திருக்கிறார்.

மிஷ்கின்

* மிஷ்கினுக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி உண்டு. மூத்தவர் கனகராஜு, இப்போது இல்லை. அவரைப் பற்றிய கதைதான் ‘நந்தலாலா’. இரண்டாவது அண்ணன் சுரேஷ்குமார், துபாயில் பணிபுரிகிறார். தம்பி, ஜி.ஆர்.ஆதித்யா ‘சவரக்கத்தி’ படத்தின் மூலம் இயக்குநரானார். நடிகராகவும் நடித்து வருகிறார். மிஷ்கினுக்கு ஒரே ஒரு மகள் உண்டு. கனடாவில் படித்துவருகிறார்.

* மதுரை ஒரு தூங்கா நகரம் என்பதைத் தாண்டி, மதுரையை மிஷ்கினுக்கு ரொம்பவே பிடிக்கும். காரணம், ‘சித்திரம் பேசுதடி’ வெளியான சமயத்தில் மதுரையில் ஒரு ரோட்டோரம் அவர் நின்றிருந்தார். அவரைக் கண்டுகொண்ட ஒருவர், ‘இனி ஒழுங்கா படம் எடு’ எனச் சொல்லிச் செல்ல, அவரின் விமர்சனத்தைப் பெரிதும் ரசித்திருக்கிறார் மிஷ்கின். “என்னுடைய முதல் ரசிகர் மதுரைக்காரர்தான்” என்பார், கூலிங் கிளாஸ் புன்னகையோடு!

மிஷ்கின்

* தயாரிப்பாளர் தாணு மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறார் மிஷ்கின். ‘சித்திரம் பேசுதடி’ முடிந்ததும் தயாரிப்பாளர் தாணு, மிஷ்கினைக் கூப்பிட்டு அவரது தயாரிப்பில் படம் இயக்குவதற்காக 50,000 அட்வான்ஸ் கொடுத்தார். அதன்பின் மிஷ்கின் சொன்ன ஒரு கதை, தாணுவிற்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் மிஷ்கினிடம் அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கேட்கவே இல்லை.

* நடிகர் சந்திரபாபுவின் தீவிர ரசிகர் மிஷ்கின். `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் படப்பிடிப்பு பட்டினப்பாக்கம் அருகே உள்ள க்யூபிள் ஐலண்ட் கல்லறைத் தோட்டத்தில் நடந்தபோது, சந்திரபாபுவின் கல்லறையைக் கண்டு கலங்கிப்போனார். அதன்பிறகு ஆண்டுதோறும் சந்திரபாபுவின் நினைவு தினத்தன்று, கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இளையராஜா

* தன் அலுவலகத்தையே லைப்ரரியாக மாற்றி வைத்திருக்கிறார். ஆங்கில நூல்கள் அதிகம் காணக்கிடைக்கும். அத்தனை நூல்களையும் முழுக்க வாசித்திருக்கிறாரோ இல்லையோ, ரெஃபரன்ஸுக்குத் தேவை என்றால், புத்தகத்தை உடனே எடுத்துவிடும் வகையில் அடுக்கி வைத்திருக்கிறார். சமீபகாலமாக வரலாற்று நூல்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

* ‘பிசாசு’, ‘பிசாசு 2’ என பேய்ப்படங்களை எடுத்துள்ளவர், நிஜத்தில் பேய்ப் படங்களைப் பார்க்கப் பயப்படுவார். “நான் அஞ்சு வயசுக் குழந்தைங்க. இன்னமும் பேய்ப் படங்களை நைட்ல பார்க்க மாட்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கும். கொலைகள் அதிகம் இடம்பெறும் படங்கள், அதாவது கிராஃபிக்கல் வயலென்ஸைத் தேவையில்லாமப் திணிக்கப்பட்ட படங்களையும் பார்க்க மாட்டேன்” என்பார்.

* படங்கள் பார்ப்பதைவிட, புத்தகங்கள் படிப்பதில் கவனம் செலுத்துவார். வருடத்திற்கு நாலைந்து படங்கள் பார்த்தாலே அரிது என்பார்கள். கிளாசிக்ஸ் படங்களை விரும்பிப் பார்ப்பார். அதிலும் ‘காந்தி’, ‘செவன் சாமுராய்’ போன்ற படங்கள் அவரது ஆல்டைம் ஃபேவரைட்ஸ். சமீபத்தில் கண்ணீர் கசிய ‘கடைசி விவசாயி’ பார்த்துவிட்டு, அதில் நடித்த பெரியவரின் வீட்டிற்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.

* மிஷ்கினைப் பற்றி எழுதும்போது, இளையராஜா பற்றியும் இரண்டு வரி எழுதாவிட்டால் கும்பி பாகம் ஆகிவிடும். இளையராஜாவின் இசையில் தன் ஜீவனைக் கரைப்பவர். ‘சைக்கோ’வில் அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், ‘பிசாசு 2’ படத்துக்கு அவரின் மகன் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இப்போது ‘டெவில்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் ஆகியிருக்கிறார் மிஷ்கின்.

மிஷ்கின்

* டைரக்‌ஷன் இல்லாதபோது, நடிப்பதில் கவனம் செலுத்துபவர் இப்போது சிவகார்த்திகேயன் – ‘மண்டேலா’ மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். நடிகராக அவருக்குக் கிடைக்கும் சம்பளப் பணத்தை எல்லாம் தன் அன்பு மகளுக்காகச் சேமித்துவருகிறார்.

* இப்போது தன் அலுவலகத்தில் கீபோர்டும் இசையுமாக நிரம்பி வழிபவரைப் பற்றி, ஒருமுறை இயக்குநர் வின்சென்ட் செல்வா சொன்னது நினைவுக்கு வருகிறது. “என்னிடம் அவர் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டு வரும் நாளில் சில பாடல்களையும் கம்போஸ் செய்துவிட்டு வந்து காட்டினார். அப்பவே அவருக்கு இசைஞானம் அதிகம்” என்கிறார் வின்சென்ட் செல்வா. விரைவில் அவரது இயக்கத்தில் நடிக்கவும்போகிறார் மிஷ்கின்.

சமகால தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.