இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கவிருக்கிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு ஏறக்குறைய ஒரே ஒரு மாதம் மட்டுமே இருக்கையில் இந்தத் தொடர் தொடங்கவிருப்பதால் உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாகவே இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய அணி சில விஷயங்களில் செட்டில் ஆவதற்கு இந்தத் தொடரைக் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்போடு இருக்கிறது. இந்தத் தொடரின் முக்கியத்துவம் பற்றி ஓர் அலசல் இங்கே…
“இனி புது முயற்சிகள் இல்லை!” – கேப்டன் ரோஹித் சர்மா
ஆசியக்கோப்பையில் மிக மோசமான தோல்வியைத் தழுவிய பிறகு இந்திய அணி ஆடப்போகும் முதல் தொடர் இது. உலகக்கோப்பைக்கு முன்பாக உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் தொடர் என்பதால் இந்தத் தொடரை முழுமையாக வெல்ல வேண்டும் என இந்திய அணி நினைக்கும். வெற்றி தோல்விகளைக் கடந்து சில பிரச்னைகளையும் இந்திய அணி சரி செய்ய வேண்டியிருக்கிறது.
என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேசியிருக்கிறார்.
கடந்த ஒரு வருடமாக ரோஹித்தும் டிராவிட்டும் பல பரிட்சார்த்த முயற்சிகளைச் செய்திருந்தனர். உலகக்கோப்பை நெருங்கிவிட்ட நிலையில் இனி அப்படிச் செய்யப்போவதில்லை என்பதை ரோஹித் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆக, உலகக்கோப்பைக்கான ஸ்குவாட் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஓர் உறுதியான லெவனை கட்டமைப்பதற்கான முன்னோட்டமாக இந்தியா இந்தத் தொடரை பார்க்கவிருக்கிறது.
கவலையளிக்கும் ராகுலின் ஃபார்ம்
ரோஹித்துடன் ஓப்பனராக ராகுல்தான் இறங்கப் போகிறார். ஆனால், ராகுலின் தற்போதைய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை. கடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு இப்போது வரை 7 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். 212 ரன்களை 124 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பையிலுமே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தைத் தவிர்த்து மற்ற எல்லா ஆட்டங்களிலும் சொதப்பல்தான். உலகக்கோப்பைக்கு ஒரு நல்ல வலுவான ஓப்பனிங் கூட்டணி தேவை. அதை மனதில் வைத்து உள்ளூரில் நடைபெறும் இந்தத் தொடரில் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியே ஆக வேண்டும்.
தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா?
தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவருமே இந்த ஸ்குவாடிலும் இருக்கிறார்கள், உலகக்கோப்பை ஸ்குவாடிலும் இருக்கிறார்கள். இரண்டு விக்கெட் கீப்பர்களில் யார் முதல் சாய்ஸ் கீப்பர் என்பதை இந்தத் தொடரிலேயே முடிவு செய்தாக வேண்டும். இனியும் அவர் ஒரு போட்டி இவர் ஒரு போட்டி எனக் குத்துமதிப்பாக தெரிவு செய்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இருவருமே லெவனில் இருக்கும்பட்சத்தில் கூடுதல் பௌலிங் ஆப்ஷன் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். ஆக பண்ட் vs டிகே – இந்த விஷயத்தில் இந்தத் தொடரில் ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டும்.
தீபக் ஹூடாவின் இடம் என்ன?
தீபக் ஹூடா திறமையான வீரர். சிறப்பாக பெர்ஃபார்மும் செய்திருக்கிறார். ஆனாலும், டாப் ஆர்டர் வலுவாக இருப்பதால் ரொம்பவே கீழேதான் அவர் இறக்கப்படுகிறார். ஹூடாவை லெவனில் எடுக்கும்பட்சத்தில் அவருக்கு உரித்தான அவரின் பெஸ்ட் முழுமையாக வெளிப்படும் இடம் ஒன்றை அவருக்கு உறுதி செய்து கொடுக்க வேண்டும்.
ஹர்சல் படேல், பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சிறிய ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளனர். அவர்கள் வார்ம் அப் செய்துகொள்ள இந்தத் தொடரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆஸ்திரேலியாவின் நிலை என்ன?
2017-18 இல் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை 1-1 என டிரா செய்திருந்தது. 2018-19 இல் இந்தியாவிற்கு வந்திருந்த ஆஸ்திரேலிய அணி 2-0 என டி20 தொடரை வென்றுவிட்டு சென்றிருந்தது. ஆரோன் ஃபின்ச் தலைமையில் இந்த முறை இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணியில் சில முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை.
வார்னருக்கு ஏற்கெனவே ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஸ்டார்க், மார்ஸ், ஸ்டாய்னிஸ் என முக்கியமான வீரர்கள் மூவருமே காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கப்போவதில்லை. இவர்கள் இல்லாவிடிலும் பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், டிம் டேவிட் என வலுவான அணியாகவே ஆஸ்திரேலியா இருக்கிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாக இருக்கிறார். பிரீமியர் லீக் போட்டிகள் மூலம் பிரபலமானவர். ஐ.பி.எல்-லிலும் ஏற்கெனவே பெங்களூரு அணிக்காக ஆடியிருக்கிறார். இப்போது மும்பை அணிக்காக ஆடி வருகிறார். இவரது அறிமுகமும் இந்தத் தொடரில் கவனிக்கக்கூடிய அம்சமாக இருக்கும்.