'அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்' – பாஜக மாவட்ட தலைவர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: ” மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமனை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி அமைப்பின் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பீளமேடு புதூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி “ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன்” என்று பேசினார்.

பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த பகிரங்க மிரட்டல் தொடர்பான பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், தமிழக முதல்வர், தந்தை பெரியார், ஆ.ராசா எம்.பி.,. குறித்து பேசி, மிரட்டல் விடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தபெதிகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

இந்நிலையில் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உதவி ஆய்வாளர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து இன்று (செப் 21) காலை அவரை கைது செய்தனர்.

பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த, அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் இன்று காலை பீளமேடு காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர்,பீளமேடு – ஹோப்காலேஜ் வழித்தட அவிநாசி சாலையில் பேருந்துகளை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை பீளமேடு காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாலாஜி உத்தம ராமசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.