கோப்பல்: கோயிலில் சாமி சிலையை தொட்டு கும்பிட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60,000 அபாரதம் விதிக்கப்பட்ட கொடுமை கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், இன்னும் ஜாதியக் கொடுமைகள் நம் சமூகத்தில் இருந்து முழுமையாக அகலவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.
நாகரீக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகத்தில் ஜாதிய பாடுபாடுகளும், தீண்டாமைகளும் கடைப்பிடிக்கப்படுவது என்பது இன்னும் நாம் காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறோம் என்பதையே நொடிக்கு ஒரு முறை உணர்த்துகிறது.
வட மாநிலங்களில் தீண்டாமை அதிகம்
இந்தியாவை பொறுத்தவரை நகரங்களை விட கிராமப்புறங்களில் அதிக அளவில் ஜாதி பாகுபாடுகள் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் வட மாநிலங்கள் மிக மோசமான ஜாதியக் கட்டமைப்பில் கட்டுண்டுள்ளன. உயர் ஜாதியினரின் அனுமதி இல்லாமல், ஒரு பகுதிக்குள் கீழ் ஜாதியினர் எனக் கூறப்படுவோர் நுழைவதே அங்கு முடியாத காரியமாகும்.
வட மாநிலங்களில் இப்படி வெளிப்படையாக நிகழும் ஜாதீய தீண்டாமைகள், தென் மாநிலங்களில் சற்று மறைமுகமாக அரங்கேறி வருகின்றன. இன்றைக்கும் தென் மாநிலங்களில் உள்ள ஒரு சில இடங்களுக்கும், கோயில்களுக்கும் பட்டியலினத்தவர் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
சர்ச்சையான தென்காசி சம்பவம்
இதற்கு சமீபத்திய உதாரணமாக, தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள தென்காசியில் தீண்டாமை சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. தின்பண்டம் வாங்கச் சென்ற பட்டியலின சமூக மாணவர்களிடம், உங்களுக்கு எந்தப் பொருட்களும் தர மாட்டோம் எனக் கூறி பெட்டிக்கடைக்காரர் அவர்களை விரட்டிய சம்பவம் பூதாகரமானது. இதையடுத்து, இதுதொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தீண்டாமை நிகழ்வின் தாக்கம் முடிவதற்குள்ளாக, கர்நாடகாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோயிலுக்குள் நுழைய தடை
கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ளது ஹுல்லேரஹல்லி என்ற கிராமம். இந்த கிராமத்தில் அதிக அளவில் ஆதிக்க ஜாதியினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கோயில்களுக்குள் பட்டியலின சமூகத்தின்ர உள்ளே நுழையக் கூடாது என்ற ஊர்க் கட்டுப்பாடு உள்ளது. அதனால் பட்டியலின மக்கள் கோயிலுக்கு வெளியே இருந்துதான் சாமி கும்பிட்டு செல்ல வேண்டும். அதை மீறி யாராவது கோயிலுக்குள் சென்றால் அவர்களுக்கு கடும் அபராதமும், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் தண்டனையும் விதிக்கப்படும்.
தொட்டுக் கும்பிட்ட சிறுவன்
இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சேத்தன் என்ற 14 வயது சிறுவன், நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு விஷ்ணு கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டுத் தனத்தில் ஊர்க் கட்டுப்பாடை மறந்த அந்த சிறுவன், கோயிலுக்குள் சென்று சாமி சிலையை தொட்டு கும்பிட்டு விட்டான்.
இதனை பார்த்து கோபமடைந்த கோயில் பூஜாரிகள், நிர்வாகிகள் ஆகியோர் அந்த சிறுவனை அங்கிருந்து விரட்டினர். பின்னர் ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, கோயிலில் சாமி சிலையை தொட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்தும் வரை அவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பான செய்திகள் ஊகடங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுகுறித்து அரசாங்கமோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
|