கொங்கு மண்டல அரசியல், திமுகவுக்கும் எப்போதுமே சவாலான ஓர் விஷயம். கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெற முடியவில்லை. கடந்த சில தேர்தல்களாகவே கோவை அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது.
இதையடுத்து கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை களமிறக்கினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அப்போது முதலே மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம் என்ற தகவல் வட்டமடிக்க தொடங்கின. கோவை மாவட்ட திமுகவில் தற்போது 5 மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளனர். இந்நிலையில், அதை மூன்றாக மாற்றி உள்ளனர். சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய தொகுதிகள் அடங்கியது கோவை மாநகர் மாவட்டமாகவும்,
மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவிநாசி தொகுதிகள் அடங்கியது கோவை வடக்கு மாவட்டமாகவும், சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி தொகுதிகள் அடங்கியது கோவை தெற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், கோவையில் அதற்கு ஏற்றார் போல திமுகவில் மாவட்டங்களை பிரித்து வந்தனர். ஆனால், அது அவர்களுக்கு பெரிய அளவில் கைக் கொடுக்கவில்லை. இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், “செந்தில் பாலாஜி அதிமுக ஸ்டைலில் தான் வேலை செய்கிறார்.
கொங்கு மண்டலத்துக்கு அந்த அரசியல்தான் பொருந்தும். நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அதையும் மனதில் வைத்துதான் தற்போது மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் பிரிக்கப்பட்டதிலும் அதிமுகவின் தாக்கம் இருக்கிறது. கோவை மாவட்ட அதிமுகவிலும் இதே போல மாநகர், வடக்கு, தெற்கு என்று மூன்றாக தான் உள்ளது. முக்கியமாக அவிநாசி தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் வந்தாலும், அதிமுக கட்சி ரீதியான நிர்வாகத்தில் அது கோவை தெற்கு மாவட்டத்தின் கீழ் வரும்.
அதேபோலத்தான் திமுகவிலும் பிரித்துள்ளனர். அதேபோல மாவட்ட செயலாளர் தேர்விலும், கடந்த கால தோல்விக்கு காரணமானவர்களை அதிரடியாக மாற்ற உள்ளனர்.” என்கின்றனர்.