\"அந்த\" மெகா தவறு! இந்தியாவின் வெற்றியை பறித்த \"பூதம்\"! ஆஸ்திரேலியாவிடம் தோற்றது எப்படி? இதான் காரணம்

மொஹாலி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் முதல் டி 20 போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணி நேற்று சிறப்பாக ஆடியும் பல்வேறு இடங்களில் சொதப்பி தோல்வி அடைந்துள்ளது.

மீண்டும்.. மீண்டுமா என்று சொல்லும் அளவிற்கு இந்திய அணி செய்த அதே தவறை செய்து கொண்டே இருக்கிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போதெல்லாம் அதிக ரன்களை குவிக்கும்.

170+ ரன்களை குவிக்கும். அதன்பின் பவுலர்கள் முதல் 10 ஓவர்களை மோசமாக வீசுவார்கள். பின்னர் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பார்கள்.

எங்கே இந்தியா ஜெயித்து விடுமோ என்று நினைக்கும் போது டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமாரோ அல்லது வேறு பவுலரோ மொத்தமாக ரன்களை அள்ளி வழங்கி இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்து விடுவார்கள்.

தோல்வி

நேற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணமாக அமைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் சிறப்பாகவே ஆடியது. தொடக்கத்தில் இருந்தே அதிக இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அதிரடியாக ஆடி 208-6 ரன்கள் எடுத்தது. பாண்டியா வெறும் 30 பந்தில் 5 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 71 ரன்கள் எடுத்தார். இதன் பின் இறங்கிய ஆஸ்திரேலிய அணி கேமரூன் கிரீன், மேத்யூ வேட் அதிரடியால் 19.2 ஓவரிலேயே 211-6 ரன்கள் எடுத்தது. கேமரூன் கிரீன் 30 பந்தில் 61, மேத்யூ வேட் 21 பந்தில் 45 ரன்கள் எடுத்து அசத்தினர்.

காரணம் 1

காரணம் 1

இந்த போட்டியில் இந்திய அணி தோற்க 5 முக்கியமான காரணங்கள் உள்ளது. முதல் காரணம், இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. இந்த வருடம் அதிக கேட்சுகளை விட்ட அணியே இந்திய அணிதான். நேற்றும் இரண்டு முக்கியமான கேட்சுகளை இந்திய அணி விட்டது. அக்சர் பட்டேல், கே. எல் ராகுல் ஆகியோர் தலா 1 கேட்சுகளை விட்டனர். இதில் ஒரு கேட்ச் கேமரூன் கிரீன் கொடுத்தது. இதை எல்லாம் எடுத்து இருந்தால் ஆஸ்திரேலிய அணியை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தி இருக்கலாம்.

காரணம் 2

காரணம் 2

நேற்று இந்திய அணியின் கேப்டன்சியும் சொதப்பலாக இருந்தது. டிஆர்எஸ் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரு முறை டிஆர்எஸ் எடுக்கவில்லை. மேத்யூ வேட் ஆப் சைடில் போட்டால் அடிக்கிறார் என்று தெரிந்தும் தொடர்ந்து பவுலர்களை ஆப்சைடில் போட சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு கேப்டனாக ரோஹித் நேற்று நிறுத்திய பீல்டிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. மேத்யூ வேட் போன்ற வீரரக்ளுக்கு ஆப் சைடில் பீல்டர்களையே நிறுத்தாமல் வியூகம் அமைத்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன.

காரணம் 3

காரணம் 3

நேற்று இந்திய அணியில் உமேஷ் யாதவ் ஏன் எடுக்கப்பட்டார் என்பதே சந்தேகமாக உள்ளது. எங்கேயோ ஆடிக்கொண்டு இருந்தவரை இந்திய அணியில் எடுத்துள்ளனர். நடராஜன், உம்ரான் மாலிக், ஷரத்துல் தாக்கூர், சாகர், சிராஜ் என்று இந்திய அணியிலேயே டி 20ல் நிரூபித்த வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் எடுக்காமல் ரன்களை வாரி வழங்கும் உமேஷ் யாதவை ஷமிக்கு மாற்றாக எடுத்துள்ளார். நேற்று 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் அடுத்தடுத்து பவுண்டரிகளை வாரி வழங்கி வெறும் 2 ஓவரில் 27 ரன்கள் கொடுத்தார்.

காரணம் 4

காரணம் 4

நேற்று இந்திய அணியின் பவுலிங் மொத்தமாக படுமோசமாக இருந்தது. இந்த முறையும் டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் சொதப்பினார். நேற்று மட்டும் விக்கெட் எதுவும் எடுக்கமால் 52 ரன்களை அவர் கொடுத்தார். ஹர்ஷல் பட்டேல் போட்ட 18வது ஓவரில்தான் ஆட்டம் கையை விட்டு போனது. இந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸ் போனது. அதோடு இவர் மொத்தமாக 49 ரன்கள் கொடுத்தார். டெத் ஓவர்களில் இந்திய அணி மோசமாக சொதப்புவது, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

காரணம் 5

காரணம் 5

இந்திய அணியில் கோலி, தோனி இருந்தவரை, கடைசி ஓவரில் 6 ரன்களை டிபன்ட் செய்ய வேண்டும் என்றாலும் கூட, பவுலர்களை வைத்து பிரஷர் கொடுப்பார்கள். ஆனால் ரோஹித் 19வது ஓவரிலேயே மனசை விட்டு.. டென்ஷனாகி பவுலர்களை திட்ட தொடங்கி விடுகிறார். ரன்கள் செல்லாமல் தடுக்க வேண்டும்.. சரி வியூகம் வகுத்து ரன்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்காமல்.. அவ்வளவுதான் மேட்ச் ஓவர் என்று மனசை விட்டுவிடுகிறார். பும்ரா இருந்தால் மட்டுமே டிபன்ட் செய்ய முடியும் என்றால்.. அதற்கு ரோஹித் ஏன் கேப்டனாக இருக்க வேண்டும்?

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.