ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும் ( செவ்வாய்க்கிழமை), சரஸ்வதி பூஜை அக்டோபர் 5 ஆம் தேதியும் (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளன.
ஆயுத பூஜையையொடட்டி, செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதாலும், அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களும் வருவதால், இடையில் திங்கள்கிழமை மட்டும் பணியாளர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில், சென்னை போன்ற பெருநகரங்களில் பணிநிமித்தமாக வசித்துவரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன் காரணமாக பண்டிகை நாட்களில் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிவதால், அதனை பயன்படுத்த தனியார் ஆம்னி பேருந்துகள் பயண கட்டணம் என்ற பெயரில் பயணிகளிடம் இருந்து பகல், இரவு கொள்ளை அடித்து வருகின்றன.
இந்த கட்டண கொள்ளையை தடுக்கும் நோக்கிலும், பயணிகளின் வசதிக்காகவும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஆயுத பூஜைக்காக வரும் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரு தினங்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இரு தினங்களில் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று பிற நகரங்களில் இருந்தும் 1.650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையை பொருந்தவரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை தவிர்த்து, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட உள்ளன என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.