மதுரை: ”தமிழகத்தில் திமுக தான் மத அரசியல் செய்கிறது, பாஜக அல்ல” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”திமுக எம்.பி. ஆ.ராசாவின் கருத்து தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது நீலகிரி தொகுதியில் 90 சதவீத மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து மதத்தினரும் ஆ.ராசாவை கண்டித்து வருகின்றனர். ஆனால், வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அவர் நான் பேசியது சரிதான் என தொடர்ந்து பேசி வருகிறார். இது இந்துக்களை குறிப்பாக இந்து சமய பெண்களை மனதை புண்படுத்தி வருகிறது.
திமுகவினர் இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசுவது புதிதல்ல. இந்து சனாதான தர்மத்தை திரித்து, அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் ஏதோ ஆகாத கருத்துக்கள் போல் பிரசாரம் செய்து மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றனர். அனைத்து மக்களும் இன்புற்று இருக்க வேண்டும், அனைத்து மக்களும் கடவுளை பார்க்கட்டும், அனைவருக்கும் மோட்சம் கிடைக்கட்டும், அனைவரும் நோய், நொடியில்லாமல் இருக்கட்டும் என்பதே சனாதன தர்மத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
63 நாயன்மார்களில் 42 பேரும், 12 ஆழ்வார்களில் 10 பேர் பிராமணர்கள் அல்ல. இது திமுகவுக்கு தெரியாதா? கடவுளுக்கு இணையாக நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் வழிபட்டு வருகிறோம். இந்து மதம் சாதியை அடிப்படையாக கொண்டது அல்ல.
ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். திமுக தான் மத அரசியல் செய்து வருகிறது. பாஜக ஒருபோதும் மத அரசியல் செய்ததில்லை. ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் அனுப்பி வைப்போம்.
தமிழகத்தின் பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரையால் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது. ராகுல் யாத்திரையில் பிரிவினைவாத சக்திகளை சந்தித்து பேசி வருகிறார்.
சீமான் மாதம் தோறும் ஒரு பேச்சு பேசுகிறார். அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்பது எனக்கு புரியாத புதிராக உள்ளது. தமிழகத்தில் சாதிப் பாகுபாடு அதிகமாக உள்ளது. கர்நாடகாவை விட தமிழகத்தில் சாதிப் படுகொலைகள் அதிகளவில் நடைபெறுகிறது. குழந்தைகள் தேன்மிட்டாய் வாங்குவதில் கூட சாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. சாதிய பாகுபாட்டை தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது” என்று அண்ணாமலை கூறினார்.