கோவை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜக கோவை மாநகர் மாவட்டத் தலைவர் உத்தமராசாமியை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய, ஆ.ராசாவை கைது செய்யாமல், பெயரளவுக்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல், அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக மாநகர் மாவட்டத் தலைவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத, பாசிச அரசு என்பதை இதன் மூலம் மீண்டும் ஒருமுறை திமுக நிரூபித்திருக்கிறது. திமுகவினர் வாயை திறந்தாலே, ஜனநாயகம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்கருத்து சொன்னாலே கைது செய்து, அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவின் இந்த அதிகார மிரட்டலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது. கைது செய்யப்பட்ட பாஜக மாவட்டத் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளரார்.
இதனிடையே, கைது செய்யப்படும்போது செய்தியாளர்களிடம் பாலாஜி உத்தமராமசாமி கூறும்போது, ‘‘என்னை கைது செய்தது அதிகார துஷ்பிரயோகம். ஒரு மதத்தை குறித்து அவதூறாக பேசிய அவர்களது எம்.பி.யை கண்டிக்காமல் என்னை கைது செய்துள்ளனர். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை மாநில அரசு நிரூபித்தே ஆக வேண்டும். இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்’’ என்றார்.