லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானியர்கள் உட்பட, 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கடந்த மாதம் 28ல், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. பிரிட்டன் நாட்டின் லீசெஸ்டர் நகரில் வசிக்கும் இந்தியர்கள், இந்த வெற்றியை கொண்டாடினர். இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு வசிக்கும் பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் கடந்த சில நாட்களாக தொடர்ந்தது. ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடந்தது. இந்தியர்களின் வீடுகளின் மீதும், அந்த கும்பல் தாக்கியது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரிட்டன் அரசுக்கு, இந்திய துாதரகம் வலியுறுத்தியது.
இதையடுத்து தாக்குதல் நடத்தியதாக 47 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.பயங்கரமான ஆயுதத்தை வைத்து தாக்குதல் நடத்திய, 20 வயது இளைஞர், வீடியோ பதிவு வாயிலாக அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த இளைஞர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக அவருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement