அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில், சட்டப்பேரவை சிறப்பு ஒருநாள் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்காக உத்தரவை ஆளுநர் திடீரென ரத்து செய்துள்ளார். பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி, ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பகவந்த் மான் இருந்து வருகிறார். இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த 19ம் தேதி கூட, மது குடித்து விட்டு போதையில் சென்றதால் தனியார் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். இது பெரும் சர்ச்சையானது.
அதேபோல், பாஜ தனது ஆபரேஷன் தாமரையின் மூலம் பஞ்சாப் ஆத் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக, இக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார்.
தனது கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏ.க்களை இழுக்க, தலா ரூ.25 கோடியை பாஜ பேரம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர போவதாக ஆம் ஆத்மி அறிவித்தது. இதற்காக, பஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் இன்று கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜ, காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் எதுவும் கோராத நிலையில், முதல்வர் மான் எதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பை கேட்க வேண்டும் என்று அவை கேள்வி எழுப்பின.
இந்நிலையில், சட்டப்பேரவையை கூட்டுவதற்கான தனது உத்தரவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை திடீரென ரத்து செய்தார். முறையான விதிமுறைகளை பின்பற்றாததால், இந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அவர் காரணம் தெரிவித்தார். இதற்கு கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘ஆளுநரின் நோக்கம்தான் என்ன?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.