தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் குழுவாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் பொது இடங்களில் சோதனை நடத்தி ஹிஜாப் அணியாத பெண்கள், முஸ்லிம் முறைப்படி ஆடை அணியாத பெண்களை கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒழுக்க நெறி பாடங்கள் கற்பிக்கப்படும்.
இந்நிலையில், ஈரானின் மேற்கில் அமைந்துள்ள குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்பு படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டி கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார்.
மாஷா அமினியின் மரணம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தெஹ்ரான், குர்திஸ்தான் மாகாணம் உட்பட நாடு முழுவதும் பெண்கள் சாலை, தெருக்களில் திரண்டு ஹிஜாபுக்கு எதிராக தொடர் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகின்றனர். கெர்மன்ஷா மற்றும் ஹமேடன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில், ஐந்தாவது நாளாக நாட்டின் பல இடங்களில் கூடி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை போலீஸார் ஆங்காங்கே கைது செய்து வருகின்றனர். போராட்டத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 75 பேர் காயமடைந்தனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், “மாஷா அமினி மறைவு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், அமினி உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்தார், அவரை காயப்படுத்தவில்லை என்று ஈரான் போலீஸார் விளக்கம் அளித்தனர்.
ஈரானில் கடந்த 40 ஆண்டுகளில் ஹிஜாப்புகுக்கு எதிரான மிகப் பெரிய வரலாற்று போராட்டமாக இப்போராட்டம் தற்போது மாறியுள்ளது.