ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஆண்களின் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடு ஆகும்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் கூட அவ்வப்போது நடக்கிறது. அண்மையில் ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நேற்று நடந்த இந்த போராட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் ஹிஜாபை தூக்கி எறிந்தனர். ஈரான் அரசின் இந்த அடக்குமுறைக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.