சஹாரன்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கழிவறையில் வைத்து உணவை கபடி வீரர்கள் வழங்கிய மாவட்ட விளையாட்டு அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஸ்டேடியத்தில் மாநில அளவிலான சப்-ஜூனியர் பெண்கள் கபடி போட்டி கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சாதம் மற்றும் பூரி ஆகியவற்றை கழிவறைக்குள் வைத்து வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வீரர்களும் கழிவறைக்குள் சென்று உணவு எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, உணவு விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி சஹாரன்பூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை கூடுதல் தலைமைச் செயலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை சமர்பிப்பார் என்று மாவட்ட கலெக்டர் அகிலேஷ் சிங் தெரிவித்தார்.