ஊருக்குள் நுழைய தடை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அவசியம்!

“தண்டனை மீதான பயம், ஒரு மனிதனைத் தவறுசெய்யவிடாமல் தடுக்கிறது.” என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய சட்டங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில்தான், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989 இயற்றப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழிந்தும் வன்கொடுமை ஓய்ந்தபாடில்லை. சாதிகள் எங்கிருக்கின்றன என்று கேட்பவர்களுக்கு இன்னும் சாதிகள் இருக்கின்றன என்பதை சமீபத்திய பாஞ்சாகுளம் தீண்டாமை சம்பவம் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குத் தின்பண்டம் தரக்கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறும் வீடியோ வைரலானது. அதேபோல், பாஞ்சாகுளத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் எஸ்.சி மாணவர்களை பெஞ்ச் மீது அமரவிடாமல் தரையில் உட்காரச் செய்கிறார்கள் என்பதும், அவர்கள் சத்துணவு சாப்பிட தட்டு தரப்படுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார், அந்த கடைக்காரர் உள்பட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். சிறுவர்களிடம் தீண்டாமையை வெளிப்படுத்திய கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிகள் 5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து நீதிபதி பத்மநாபன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சட்டப்பிரிவின்படி அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை குற்றவாளிகள் ஊருக்குள் நுழையாமல் தடை விதிக்க முடியும். அதன்படி, போலீசார் ஒரு வருட காலம் குற்றவாளிகள் ஊருக்குள் அனுமதிக்க கூடாது என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால், நீதிபதி ஆறு மாத காலம் தடை விதித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இதுபோன்ற ஒரு பிரிவு இருப்பது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐ.ஜி., அஸ்ரா கார்க் எடுத்த முயற்சி, நீதிபதி பத்மநாபனின் உத்தரவு காரணமாக இந்த சட்டப்பிரிவு முதல் முறையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976ஆம் ஆண்டில் அது குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நமது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது தலித் மக்களை பாதுகாக்கவென்று தனிசட்டம் உருவாக்கப்படவில்லை. 1955இன் குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டத்திலேயே தலித் மக்களின் பாதுகாப்புக்கான கூறுகளும் அடக்கப்பட்டிருந்தன. ஆனால், சாதியம் கொடூரமாக வளரத் துவங்கியபோது, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை தற்காப்பதற்காக 1989ல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் கொண்டுவரபட்டது. முதலில் இந்தச் சட்டம் பட்டியலின மக்களுககு மட்டுமே பொருந்தும் வகையில் இருந்தது. பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை நாடாளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989இல் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தில் 15 விதமான வன்கொடுமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதுதவிர, குடிமை உரிமை பாதுகாப்புச்சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப்படியும் மேலும் 7 வன்கொடுமைகள் சேர்க்கப்பட்டன. வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், ஊருக்குள் நுழைய தடை விதித்திருக்கும் தீர்ப்பு கவனம் ஈர்த்துள்ளது.

அதேசமயம், ஒவ்வொர் ஆண்டும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன எனும் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான தேசிய ஆவண காப்பகத்தின் தகவல் கவலை அளிக்கிறது. இந்தியா முழுவதும் நடைபெறும் குற்றங்கள் குறித்த ஆண்டறிக்கையை தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, தலித்துகளுக்கு எதிராக 2019ஆம் ஆண்டில் இந்திய அளவில் 45876 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்திருந்தன. அது 2020 ஆம் ஆண்டில் 50202 ஆக அதிகரித்தது. 2021ஆம் ஆண்டில் அது 50744ஆக அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி அறிக்கை 2021 கூறுகிறது.

தமிழ்நாட்டில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 5,916 வழக்குகள் நீதிமன்றத்திலும் 570 வழக்குகள் காவல்துறை விசாரணையிலும் நிலுவையில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

சாதிவெறியுடன் நடத்தப்படும் தாக்குதல்கள் பல சமயங்களில் வெளிச்சத்துக்கு வந்தாலும், பல்வேறு இடங்களில் இந்தக் கொடுமைகள் வெளியில் தெரியாமலே அழிந்துபோகின்றன. பெரும்பாலான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை. உண்மையில் தலித்துகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எளிதில் அவர்கள் வெளியில் சொல்வதில்லை. ஏனெனில் அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆதிக்க சாதியினரின் அழுத்தம், விசாரணை அதிகாரிகளின் சாதியப் போக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் வன்கொடுமை சட்டவழக்கு நிருபிக்கப்பாடாமல் நீர்த்துப் போகிறது.

இந்த பின்னணியில், ஊருக்குள் நுழைய தடை விதிப்பது திரைப்படங்களில் வருவது போன்று இருந்தாலும், நீதிமன்றங்கள், காவல்துறை இல்லாத போது ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் நாட்டாமைகள் விதிக்கும் தீர்ப்பு போன்று சட்டப்பிரிவு இருப்பதாக கூறப்பட்டாலும், சாதிக்கு எதிரானது என்பதால் எந்த தண்டனையும் தகும் என்பதால் இந்த தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர். உண்மையில், வன்கொடுமை தடுப்புசட்டத்தை கடுமையாகவும், நியாயமாகவும் அமல்படுத்தவேண்டும். அதேசமயம் எந்த ஒரு சட்டமும் முழு பாதுகாப்பை தந்துவிசாது; சாதிய சமூகத்தில் மனமாற்றம்தான் முக்கியம் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.