பாட்னா: ‘எனக்கு என்று எதுவும் வேண்டாம். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே எனது ஒரே குறிக்கோள்,’ என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து, தனது தலைமையில் புதிய கூட்டணி ஆட்சியை ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் அமைத்துள்ளார். அடுத்த மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் முயற்சியில் இவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடியுடன் நிதிஷ் கூட்டணி அமைத்தால், இந்த மாநிலத்தில் பாஜ.வை அவர் எளிதாக தோற்கடிப்பார் என்று ஐக்கிய ஜனதா மூத்த தலைவர் சில தினங்களுக்கு முன் கூறினார்.
இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள புல்பூர் மக்களவை தொகுதியில் நிதிஷ் குமார் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவின. இது பற்றி நிதிஷிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேட்டபோது, ‘இவை எல்லாம் வெறும் யூகங்கள் தான். இதுபோன்ற பேச்சுக்களுக்கு எந்த அடிப்படையும் கிடையாது. இது போன்ற செய்திகள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வருகின்றன என தெரியவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் மட்டுமே நான் ஆர்வமாக இருக்கிறேன். நான் எனக்காக எதையும் செய்ய விரும்பவில்லை. இளைய தலைமுறையினருக்காக தான், தேஜஸ்வி போன்றவர்களுக்காக தான்…’ என தெரிவித்தார்.