திருமலை: சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினரான, தொழிலதிபர் அப்துல் கனி மற்றும் சுபீனா பானு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை நேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கோயிலில் உள்ள ரங்க நாயக மண்டபத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் ரூ.1.02 கோடிக்கான காசோலையை காணிக்கையாக வழங்கினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 27-ம் தேதி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழா அக்டோபர் 5-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமலையில் நேற்று கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியான ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்’ நடைபெற்றது.இதனால் பக்தர்கள் நண்பகல் 12 மணிக்கு பின்னர் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ரூ. 5.71 கோடி காணிக்கை:
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் கடந்த திங்கட்கிழமை மட்டும் பக்தர்கள் ரூ.5.71 கோடி காணிக்கை செலுத்தி இருந்தனர். மேலும் அன்றைய தினம் 62,276 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில், 31,140 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.