பெங்களூரு :’முதல்வருக்கு 40 சதவீதம் கமிஷன் செலுத்துங்கள்’ என தலைப்பிட்டு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன், பெங்களூரில் ‘போஸ்டர்’கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடக பா.ஜ., அரசு, தங்களிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக, ஒப்பந்ததாரர்கள் சமீபத்தில் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீடு இருக்கும் பெங்களூரு ஆர்.டி.நகர் சாலை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் வீடு இருக்கும் குமாரகிருபா சாலை உட்பட முக்கிய தலைவர்களின் வீடுகள் அமைந்துள்ள பல பகுதிகளில் நேற்று காலை ‘PAYCM’ என தலைப்பிட்டு ‘பேடிஎம்’ பணப் பரிவர்த்தனை செயலி போல வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அதன் மீது, 40 சதவீதம் கமிஷன் அரசு என்று குறிப்பிட்டு, கியூ.ஆர்., கோடு வடிவில் நடுவில் முதல்வர் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. இதைஅடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் புகாரின்படி, நான்கு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது பற்றி பசவராஜ் பொம்மை கூறுகையில், ”போஸ்டர்களில் என் பெயரை குறிப்பிட்டதன் வாயிலாக, கர்நாடக மாநிலத்தையும், என் பெயரையும் திட்டமிட்டு கெடுப்பதற்கு சூழ்ச்சி செய்துள்ளனர்,” என்றார்.
பா.ஜ., பதிலடி
இதற்கு பதிலடியாக, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர், கியூ.ஆர்., கோடு நடுவில் பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.இதில், ‘மாநிலத்தை கொள்ளை அடித்து, பாழ் செய்துள்ள இந்த ஊழல் ஜோடியை மாநிலத்தில் இருந்து வெளியேற்ற ‘ஸ்கேன்’ செய்யுங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement