கிளி வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருச்சியில் காவிரி-கொள்ளிடம் கரை புரண்டோடினாலும் திருவெறும்பூர் அருகே உள்ள கிளி வாய்க்காலில் தண்ணீர் விடாததால் அப்பகுதியில் சம்பா நாற்றுக்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு:

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் இருந்து கல்கண்டார் கோட்டை, சோழமாதேவி, நவல்பட்டு, பகுதியில் இருந்து கசிவுநீர் கவுற்று ஆறு வழியாக கிளி வாய்க்கால் வரும் தண்ணீர், வேங்கூர், கூத்தைபார் அரசங்குடி, நடராஜபுரம், முடுக்குபட்டி பத்தாளப்பேட்டை, கிளியூர் வரை உள்ள கிளை வாய்க்கால்களில் சுமார் 8000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் கிளி வாய்க்காலில் பாசனத்திற்காக அதிக நீர் தேவைப்படும் பட்சத்தில் மஞ்சள் திடல் உய்ய கொண்டான் வாய்க்காலில் இருந்து பிரியும் குளுமியை சரி செய்து கிளி வாய்க்காலில் அதிக நீரை விவசாயிகளுக்கு வழங்குவார்கள். கிளி வாய்க்காலை ஒட்டிய பகுதிகளில் தற்போது சம்பா ஒரு போக சாகுபடிக்காக நாற்று விடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கிளி வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் சம்பா ஒருபோக நடவு பயருக்காக விடப்பட்டுள்ள நாற்றங் கால்கள் காய்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர். ஆரம்பமே இப்படி தண்ணீர் இல்லாமல் நாற்றுகள் காய்ந்தால் விவசாயம் செய்த பிறகு நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு தண்ணீர் வருமா என்ற அச்சமும் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், கல்லணை அருகே தான் திருவெறும்பூர் இருக்கு. கல்லணையில் காவிரி, கொள்ளிடம் வழியாக வெள்ள நீர் கடந்த சில மாதங்களாகவே கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கினால் கிளை வாய்க்கால்களில் தூர்வாறல் முறையாக நடக்காததே எங்களின் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாதது காரணம்.

வெள்ளம் கரைபுரளும் சூழலில் நீரை தேக்கி வைக்க முடியாத நிர்வாகம் சிறு,குறு கிளை வாய்க்கால்கள் வழியாக ஏரி, குளங்களுக்கு எடுத்துச்சென்றிருந்தால் விவசாயத்திற்கு தண்ணி கிடைச்சிருக்கும். மேலும், கிளை வாய்க்கால்களில் கூடுதலாக தண்ணீர் திறந்து விடாததால், நடவு நட்ட பயிர்கள் மே மாதம் போல, செப்டம்பரில் அடிக்கும் வெயிலில் காய்ந்துகொண்டிருப்பது வேதனையாக இருக்கின்றது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் கிளி வாய்க்காலில் உடனடியாக தண்ணீரை கூடுதலாக திறந்து விட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி</strong>

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.