மேட்டுப்பாளையத்தில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி காவல்துறை ரோந்து வாகனத்தை கண்டவுடன் கொள்ளையர்கள் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இவர்களின் வசதிக்காக பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயந்திரம் சாலையோரமுள்ள கம்பெனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த வழியே ரோந்து வந்த போலீசாரின் வாகனத்தை பார்த்தவுடன் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து அருகேயுள்ள விவசாய தோட்டத்தில் தாங்கள் எடுத்து வந்த கேஸ் சிலிண்டரை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி பத்ரிநாராயணன் ஆய்வு நடத்தியதோடு தடவியியல் நிபுணர்கள் உதவியோடு கைரேகை பதிவுகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளை முயற்சி நடைபெற்ற ஏடிஎம்-மில் ரூபாய் பத்து லட்சம் வரை இருந்திருக்கலாம் என்றும் இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM