கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதற்காக சென்னை மாமன்ற பா.ஜ.க உறுப்பினர் உமா ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கும், தி.மு.க எம்.பி ஆ.ராசாவை விமர்சனம் செய்ததற்காக பா.ஜ.க மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதற்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
உமா ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறைவழிபாட்டிற்கு சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்குத் தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளைப் பறித்துள்ளார்கள்.
இதையும் படியுங்கள்: நடிகர் சூரியின் ஓட்டலில் வணிக வரித்துறையினர் திடீர் ரெய்டு.. காரணம் என்ன?
கோபாலபுரம் குடும்பத்தார் கோவிலுக்கு செல்லும்போது, பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? ஒருமித்த சிந்தனையோடு சிலர் கூடி கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் எங்கேனும் உள்ளதா?
மக்களின் அன்றாட பிரச்சனைக்குத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்கும் இந்த தி.மு.க அரசின் நடவடிக்கையை தமிழக பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது, எனப் பதிவிட்டுள்ளார்.
ஆ.ராசா விவகாரத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆ.ராசா அவர்களை இந்த திறனற்ற தி.மு.க அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.
வெறுப்பை உமிழும் திரு ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு பாலாஜி அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை தமிழக பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது.
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் திரு ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜ.க மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?
தி.மு.க அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள், என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil