கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கும் திமுகவினருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்த பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சனாதன தர்மம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தாம் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ள ஆ. ராசா, மநுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதையே தாம் குறிப்பிட்டுப் பேசியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆ. ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பாக பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசும்போது, “ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன். திமுகவினர் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்,” என்று கூறியதுடன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான சில கருத்துகளையும் கூறியிருந்தார்.
- மனு நீதி என்றால் என்ன? அது என்ன சொல்கிறது, ஏன் வந்தது?
- ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலை உள்ளது ஏன்?
- ஆ. ராசா இந்துக்கள் பற்றி தவறாக பேசியதாக புதிய சர்ச்சை – பின்னணி என்ன?
பாலாஜி உத்தம ராமசாமியின் இந்த பகிரங்க மிரட்டல் சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முதல்வர், தந்தை பெரியார் ஆகியோர் குறித்து இழிவாக பேசியதோடு, பகிரங்க மிரட்டல் விடுத்த பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்று புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை பீளமேடு காவல் துறையினர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்தனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜ.க தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு மதத்தை குறித்து பேசிய எம்பியை கண்டிக்காமல் உள்ளனர். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை நிரூபிக்கவும். நீதித்துறை மீது முழுநம்பிக்கை இருக்கிறது. இதை சட்டபூர்வமாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். என் சகோதரிகளை தாய்மார்களை பழித்துப் பேசியவர் எவனாக இருந்தாலும் சும்மா விடமாட்டேன்,” என்றார்.
போலீசார் அவர்களை காவல் நிலையத்தின் உள்ளே அனுமதிக்காமல் இரும்புத் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பாலாஜி உத்தம ராமசாமி தனியார் வாகனத்தில் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த பாஜகவினர் காவல்துறையினர் வெளியேறவிடாமல் தடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தள்ளு முள்ளுக்கு இடையே பாலாஜி உத்தம ராமசாமி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பாஜகவினர் அவினாசி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பாலாஜி உத்தம ராமசாமி கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 ஏ (இரு தர்ப்பினரிடையே மோதலை உருவாக்கும் விதமாகப் பேசுதல்) மற்றும் பிரிவு 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் பேசுதல்), பிரிவு 505 (அவதூறான செய்திகளைப் பேசுதல் அல்லது பதிப்பித்தல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் நடுவர் செந்தில் ராஜன், பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.
அண்ணாமலை கண்டனம்
பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1572421825422032897
”தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு . ராஜா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் திரு ராஜாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் திரு ராஜாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்,” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்