80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘சின்னத்தாயி’.
இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.
டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids
தமிழில் எத்தனையோ வெகுசன சினிமாக்கள் வெளிவருகின்றன. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி யோசித்தால் அவை பெரும்பாலும் உள்ளீடு அற்றதாக, வெறும் சக்கையாகவே இருக்கும். ஆனால் இவற்றிலிருந்து விலகி அரிதான சில சினிமாக்களில்தான் உயிர் இருக்கும்; ஆன்மா உறைந்திருக்கும். கல்லிலிருந்து சிற்பம் தோன்றி பிறகு கடவுளாவது போலக் காலம் கடந்தும் அதை நாம் உணர முடியும். அப்படியான உயிர்ப்புடன் கூடிய தமிழ்த் திரைப்படம்தான் 1992-ல் வெளிவந்த ‘சின்னத்தாயி’.
இந்தத் திரைப்படமும் அடிப்படையில் ஜனரஞ்சக அம்சங்கள் கொண்ட படைப்புதான் என்றாலும் அதையும் தாண்டி தமிழ் மண்ணின் சிறுதெய்வ வழிபாடு, சடங்கு, மரபு போன்ற நாட்டுப்புற கலாசாரத்தின் கூறுகள் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன. இடைத்தரகர்கள் அன்றி கடவுளிடம் நேரடியாக வேண்டுவது சிறுதெய்வ வழிபாட்டில் சாத்தியம். இந்தப் படம் இந்த மரபையும் தாண்டுகிறது. உக்கிரமாக வரும் கடவுளையே வழிமறித்து நின்று நியாயம் கேட்கிறது. சமூக இயக்கம் என்னும் பகடையாட்டத்தில் எப்போதும் பெண்களே பலியாடுகளாக இருப்பதின் அலவத்தை உரத்த குரலில் பேசியிருக்கிறது.
ராசம்மாவும் சின்னத்தாயும் ஒன்றுதான்
தன்னுடைய மகள் சின்னத்தாயைப் பொத்தி பொத்தி வளர்க்கிறாள் ராசம்மா. அதற்கொரு வலுவான காரணம் இருக்கிறது. பாடகன் ஒருவனின் இசையில் மயங்கி தன்னையே பறிகொடுக்கிறாள் ராசம்மா. காரியம் முடிந்ததும் கழன்று கொள்கிறான் பாடகன். திருமணம் ஆகாமலேயே குழந்தையுடன் நிற்கும் ராசம்மாவை ‘ஆசை நாயகி’யாக வைத்துக் கொள்கிறான் சாமுண்டி.
பொருளாதார நிறைவோடு வாழ்ந்தாலும் ராசம்மாவை ஊர் ஏசுகிறது. விதம் விதமாக வம்பு பேசுகிறது. ‘என்ன இருந்தாலும் வைப்பாட்டியா வாழறவதானே?’ என்று கரித்துக் கொட்டுகிறது. தன் மகளுக்காக அத்தனை அவமானத்தையும் சகித்துக் கொள்கிறாள் ராசம்மா. “எவன் கிட்டயாவது ஏமாந்து என்னை மாதிரியே ஊர்ப்பழிக்கு ஆளாயிடாத…” என்று மகளுக்கு அனுதினமும் உபதேசிக்கிறாள்; அடிக்கடி எச்சரித்துக் கொண்டேயிருக்கிறாள். ஆனால் விதி அந்தத் திசையில்தான் பயணிக்கிறது.
ஊரில் மதிப்பும் மரியாதையுமாக வாழும் ‘சாமியாடி’ குடும்பத்தைச் சோ்ந்த இளைஞனான பொன்ராசுவிடம் காதலில் விழுகிறாள் சின்னத்தாயி. இருவருமே இளம் வயதில் ஒன்றாக விளையாடிப் பழகியவர்கள். ஒருபக்கம் தாயின் எச்சரிக்கை, இன்னொரு புறம் காதலின் அழைப்பு என்று தத்தளிக்கிறாள் சின்னத்தாயி. ‘ஒருபோதும் உன்னைக் கைவிடேன்’ என்று வாக்களிக்கிறான் பொன்ராசு. ராசம்மாவைப் போலவே சின்னத்தாயியும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிறாள். ‘தலதலையா அடிச்சிக்கிட்டேனே’ என்று தாய் கதறுகிறாள். தன் மகனைப் பட்டணத்திற்கு அனுப்பி வைக்கிறது, சாமியாடியின் குடும்பம்.
ராசம்மாவைத் தாண்டி சின்னத்தாயியின் மீதும் கண் வைக்கிறான் சாமுண்டி. கை வைக்கவும் துணிகிறான். தாய்ப்பறவையாக சீறி வருகிறாள் ராசம்மா. இதில் ஏற்படும் மோதலில் வெறிகொண்டு ராசம்மாவைக் குத்திச் சாய்க்கிறான் சாமுண்டி. ‘வைப்பாட்டியா… சண்டியரா…’ என்னும் போது சண்டியரின் பக்கமே ஊர் நிற்கிறது. குற்றத்தை மூடி மறைக்கிறது. கண்ணெதிரே தாய் கொலை செய்யப்பட்டதைப் பார்த்த சின்னத்தாயி காவல்துறையின் உதவியை நாடுகிறாள். சாமுண்டிக்குத் தண்டனை வாங்கித் தருகிறாள்.
ராசம்மாவைப் போலவே சின்னத்தாயியையும் ஊர் ஏசுகிறது. படிப்பு முடித்துத் திரும்பி வரும் பொன்ராசு, தகப்பனின் பாதையைப் பின்பற்றிச் சாமியாடியாக மாறுகிறான். அவன் சுடலைமாடனாக மாறி ஒரு கையில் தீப்பந்தமும் இன்னொரு கையில் குருதிச்சோற்றுடனும் ஆவேசமாக ஊரைச் சுற்றி வரும் போது அவனை வழிமறித்து நீதி கேட்கிறாள் சின்னத்தாயி. பிறகு என்ன நடந்தது என்கிற உணர்ச்சிகரமான கிளைமாக்ஸுடன் படம் நிறைகிறது.
சுடலை மாடசாமியின் ஆவேசத்தை வெளிப்படுத்திய வினுச்சக்கரவர்த்தி
ஒரு திரைப்படத்தில் ‘Casting’ எனப்படும் நடிகர் தேர்வு சிறப்பாக அமைந்து விட்டாலே பாதிக்கிணற்றைத் தாண்டி விடலாம். அந்த வகையில் இந்தப் படத்தின் நடிகர்களின் பட்டியல் கச்சிதமாக உள்ளது. ‘சாமியாடி’யாக நடித்திருக்கும் வினுச்சக்கரவர்த்திக்கு இதுவொரு குறிப்பிடத்தகுந்த படம் என்று சொல்லலாம். அவரது தோற்றத்திற்கும் கனமான குரலிற்கும் கண்களை உருட்டி மிரட்டும் உடல்மொழிக்கும் ‘சாமியாடி’ பாத்திரம் மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
கொடை விழாச் சடங்கின் இறுதிக் கட்டமாகச் சாமியாடி காவல்தெய்வமாக மாறி ஆவேசமாக ஊரைச் சுற்றி வருவதும் கோயிலை அடைந்ததும் ஆவேசம் தணிந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வதும் ஒரு மரபு. உறுமி மேளம் உள்ளிட்டு கொடைவிழாவின் பிரத்யேக ஒலிகள் கேட்டதும் மெல்லச் சன்னதம் ஏறுவது போல் வினுச்சக்கரவர்த்தி தந்திருக்கும் முகபாவங்கள் அருமை. தன்னுடைய மகன் ‘பாவப்பட்ட’ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுடன் இணைந்து விட்டானே என்பதை அறிய நேரும் போது இறைத்தன்மைக்கும் சராசரி நபருக்கும் இடையில் நின்று தத்தளிக்கும் காட்சியும், ராசம்மா வழிமறித்து நியாயம் கேட்கும் போது வருகிற தவிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் வினுச்சக்கரவர்த்தி.
பாவப்பட்ட பாத்திரங்களுக்கு என்றே சில நடிகைகள் நேர்ந்து விடப்பட்டிருப்பார்கள். கண்ணீரும் கம்பலையுமாக சோகக்காட்சிகளில் இவர்கள் நடித்திருப்பதுதான் நம் மனதில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கும். சபீதா ஆனந்த் அப்படிப்பட்ட ஒருவர். தமிழில் சோகமான பாத்திரங்களே இவருக்கு நிறையத் தரப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. சபீதா மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். ‘ராசம்மா’ என்னும் பாத்திரத்தை இந்தத் திரைப்படத்தில் சிறப்பாகக் கையாண்டுள்ளார். ஆண்களின் உலகத்தில் தொடர்ந்து வேட்டையாடப்படும் பெண்களின் பரிதாப சித்திரத்தை உருக்கமாகப் பிரதிபலித்துள்ளார். தன்னைப் போல தன் மகளும் எந்தவொரு ஆணிடமும் ஏமாந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கையை மேற்கொள்ளும் தாய்ப்பறவையாக இவரது பங்களிப்பு நன்றாக அமைந்துள்ளது.
வில்லன் பாத்திரங்களில் நடித்து பிறகு ஹீரோவாக ஆனவர் நெப்போலியன். ‘சாமுண்டி’ என்கிற சண்டியர் பாத்திரம் இவருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளது. வாயில் புகையிலையை அள்ளிப் போட்டு கையில் உள்ள கறையை ராசம்மாவின் சீலையில் துடைத்து விட்டு அய்யனார் சிலை போலக் கம்பீரமாக இவர் வெளியேறி நடக்கும் ஆரம்பக் காட்சியே பார்ப்பதற்கு அத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஆனால் சாமுண்டி ஒரு பெண் பித்தன். மனைவியின் வயிற்றெரிச்சலையும் மீறி இதர பெண்களிடம் உறவு வைத்துக் கொள்வது இவனுக்கு ஆனந்தமான பொழுதுபோக்கு. தாயைத் தாண்டி மகளிடமும் காமப்பார்வையை வீசுவதும் ராசம்மாவைக் கொன்று விட்டு எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தெருவில் நடந்து போவதும், மனைவியைக் கைநீட்டி அடிப்பதும்… என்று ஓர் ஆணாதிக்க பிரதிநிதியை தன் பாத்திரத்தில் சரியாக வெளிப்படுத்தியுள்ளார் நெப்போலியன்.
ராதாரவியும் ஒரு ஹீரோதான்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் ராதாரவி. பாதிப்படம் முடிந்த பிறகுதான் இவரது என்ட்ரி இருக்கும். ஆனால் ஒரு மாஸ் ஹீரோவிற்கான பரபரப்பைக் கொண்டிருக்கும். காட்சியின் சூழல் அப்படி. கொலைக்குற்றவாளி சாமுண்டியைப் பாதுகாப்பதற்காக ஊரே ஒன்று திரண்டிருக்கும் போது பாவப்பட்ட சின்னத்தாய்க்கு சட்டத்தின் உதவியை வழங்கும் நேர்மையான, துணிச்சலான இன்ஸ்பெக்டராக ராதாரவி அசத்தலாக நடித்திருந்தார். தனியாளாக நின்று சாமுண்டி மற்றும் அவனது ஆட்களுடன் மோதி, ஊரை எச்சரித்து சாமுண்டியை போலீஸ் ஜீப்பில் ஏற்றும் அந்தக் காட்சி விறுவிறுப்பானது. ‘அப்பாடா…’ என்று பார்வையாளர்களுக்கே அப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும்.
பொன்ராசுவாக நடித்த விக்னேஷ் மற்றும் சின்னத்தாயியாக நடித்த பத்மஸ்ரீ ஆகிய இருவரும் இந்தப் படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். சினிமாவில் நடிப்பதற்காகப் பல போராட்டங்களை அதுவரை சந்தித்துக் கொண்டிருந்த விக்னேஷிற்கு ‘சின்னத்தாயி’ ஓர் அருமையான அறிமுகமாக அமைந்தது. ஓர் இளம் காதலனின் தவிப்பையும் ஏக்கத்தையும் பிரிவுத் துக்கத்தையும் இந்தப் படத்தில் சரியாக வெளிப்படுத்தியிருந்தார்.
தன் பெயரை பிறகு ‘ராஜேஸ்வரி’ என்று மாற்றிக் கொண்டு ‘பொற்காலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் பத்மஸ்ரீ. இவருக்கும் இதுவொரு சிறந்த அறிமுகப்படம். படத்தின் தலைப்பே இவரது பாத்திரத்தைக் கொண்டதுதான். ஒரு விடலைப் பெண்ணாக காதலைத் தவிர்க்க முடியாத ஏக்கத்தின் தவிப்பு ஒருபக்கம், தாயைப் போலவே தானும் ஏமாந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வு இன்னொரு பக்கம், இரண்டிற்கும் இடையில் தத்தளிக்கும் இளம்பெண் பாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார். கண்களில் காதல் கனவு மிதக்க, நீர் எடுக்காமல் வெறும் குடத்துடன் இவர் திரும்பும் காட்சி முதற்கொண்டு குழந்தையை ஏந்தி உணர்ச்சிகரமாக நீதி கேட்கும் காட்சி வரை பத்மஸ்ரீயின் நடிப்பு அற்புதமாக அமைந்திருந்தது.
‘மடிப்பு அம்சா’வாக ‘தலைவாசல்’ படத்தில் பிரபலமானாலும் அதற்கு முன்பு ஜெயந்தி என்கிற பெயரில் நடித்துக் கொண்டிருந்த விசித்ரா, முகம் பதிவாகும் அளவிற்குத் தோன்றிய படம் ‘சின்னத்தாயி’. கவுண்டமணி – செந்திலின் காமெடி டிராக்கும் இதில் சுவாரஸ்யமாக இருந்தது. மையக்கதையை ஒட்டியே இந்த நகைச்சுவை டிராக்கும் அமைந்திருந்தது.
மனைவிக்குத் தெரியாமல் அவரது தங்கையைக் கவர முயல்வார் கவுண்டமணி. இவரிடமிருந்து பணத்தைத் திருடி எதிரே மளிகைக் கடை வைக்கும் செந்தில் “எனக்கு முதலாளி, தொழிலாளி வித்தியாசமெல்லாம் கிடையாது” என்று அமர்த்தலாகப் பேசும் போது “அடுத்தவங்க காசுல சோஷியலிஸம் பேசாதீங்கடா… சொந்தக் காசுல பேசுங்க” என்று எம்.ஆர்.ராதா பாணியில் நக்கலாக கவுன்ட்டர் தருவார் கவுண்டமணி.
இன்னொரு பாத்திரத்தின் அற்புதமான நடிப்பைப் பற்றியும் சொல்லியேயாகவேண்டும். அது நெப்போலியனின் மனைவியாக நடித்திருக்கும் சூர்யா. இவரும் நிறைய மலையாளத் திரைப்படங்களில் சிறந்த பாத்திரங்களில் நடித்துள்ளார். வீடு தங்காமல் வைப்பாட்டியின் வீட்டையே சுற்றி வரும் கணவனை, கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பிப் புலம்பி திட்டுவதாகட்டும், சாட்சிக்கு தன் ‘பட்டாளத்துக்கார’ அண்ணனைக் கூப்பிட்டு வருவதாகட்டும், ராசம்மாவின் வீடு தேடிச் சென்று கோபத்துடன் சாபம் விடுவதாகட்டும்… ‘முதல் மரியாதை’ வடிவுக்கரசியின் பாத்திரத்திற்கு நிகரான நடிப்பைத் தந்து பிரமிக்கச் செய்திருக்கிறார் சூர்யா.
‘கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும்’ இளையராஜா
ஒவ்வொரு வாரக் கட்டுரையிலும் இதை எழுதி எழுதி கை வலி வந்ததுதான் மிச்சம். அதேதான். இந்தப் படத்தை அடுத்த உயரத்தை எடுத்துச் சென்றதில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. இளையராஜாவைக் கழித்து விட்டுப் பார்த்தால் இந்தப் படத்தின் உணர்ச்சிகரம் கணிசமான அளவிற்குக் குறைந்து விடும். நாட்டுப்புற இசை என்பது ராஜாவின் பிரியமான மைதானம். எனவே எக்காளம், உடுக்கை, தவண்டை, உறுமி என்று இறங்கி அடித்து ரகளை செய்துள்ளார். இந்த ஆல்பத்தில் ஏழு பாடல்கள் உள்ளன.
‘சின்னத்தாயி’ என்றதுமே பலருக்கும் உடனே நினைவிற்கு வரக்கூடிய பாடல்கள் இரண்டு. ‘கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி’ என்கிற பாடலுக்கு மூன்று வொ்ஷன்கள் உள்ளன. ஒன்று, சிறுவர்கள் இணைந்து சாமி புறப்பாட்டை விளையாட்டாக ஆடிப் பார்க்கும் பாடல். ‘வீட்டுக்கு வீடு மரமொன்னு வெக்கச் சொல்லுறாக… மரமேதான் எங்க வீடாகிப் போச்சு. ஏழைங்க வாயை மெல்லுறாக’ என்கிற பாடல் வரிகளின் மூலம் சமூக ஏற்றத்தாழ்வின் முரணை நையாண்டியாகக் கலந்திருந்தார் கவிஞர் வாலி. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் அற்புதமாக எழுதியவர் இவரே. உமா ரமணணும் கல்பனாவும் சிறுவர்களின் குரலில் சிறப்பாகப் பாடியிருந்தார்கள்.
இதே பாடல், காதலியைத் தேடும் தவிப்பாக எஸ்.பி.பியின் குரலில் இன்னொரு இடத்தில் ஒலிக்கும். இந்தப் பாடலையே கிளைமாக்ஸில் ஆவேசமான தொனியில் அமைத்திருந்தார் ராஜா. இந்த வொ்ஷனை உக்கிரமான பாவத்துடன் பாடியவர் எஸ்.ஜானகி. ஒரே பாடலின் மெட்டை விளையாட்டு, தவிப்பு, ஆவேசம் என்று மூன்று வெவ்வேறு மனநிலைக்கேற்ப மாற்றியிருக்கும் ராஜாவின் இசைத்திறமை பிரமிக்க வைக்கிறது.
‘நான் ஏரிக்கரை மேலே நின்னு’ என்பது மிக இனிமையாக ஒலிக்கும் அற்புதமான மெலடி. ஜேசுதாஸூம் ஸ்வரணலதாவும் இதன் கேட்பனுபவத்தை சுகமானதொன்றாக மாற்றியிருந்தார்கள். இதே மெட்டு இன்னொரு சூழலில் பிரிவுத் துக்கத்துடன் ஒலிக்கும். இந்த வொ்ஷனை உருக்கத்துடன் பாடியிருந்தவர் இளையராஜா. ‘நான் இப்போதும்’ என்கிற துள்ளலிசைப் பாடலை உற்சாகமாகப் பாடியிருந்தார்கள் எஸ்.பி.பியும் ஜானகியும். ‘ஆறுமுக மங்கலத்தில்’ என்கிற பாடல் திருவிழாவின் உற்சாக மனநிலையைக் கேட்பவருக்கு உடனே கடத்தி விடும் அளவில் அடித்து தோரணம் கட்டியிருந்தார் ராஜா. பாடல்களைப் போலவே பின்னணி இசையும் இந்தத் திரைப்படத்தின் சிறப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது.
எஸ்.கணேசராஜ் என்கிற அதிகம் அறியப்படாத படைப்பாளி
‘சின்னத்தாயி’ திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.கணேசராஜ். பாரதிராஜா மற்றும் மனோஜ்குமார் ஆகிய இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்று தெரிகிறது. இவரது இயக்கத்தில் ‘சின்னத்தாயி’, ‘மாமியார் வீடு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. நெப்போலியனை நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘பரணி’ என்கிற திரைப்படம், நிதிச்சிக்கலால் வெளியாகவில்லை. எஸ்.கணேசராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். கரிசல் காடுகள், அக்கினி அத்தியாயங்கள், கவசம் என்கிற மூன்று சிறுகதைத் தொகுதியையும் ‘பொட்டல்’ என்கிற நாவலையும் எழுதியுள்ளார். விருதுகளையும் பெற்றுள்ளார். இவற்றைத் தவிர எஸ்.கணேசராஜ் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரது புகைப்படம் ஒன்று கூட இணையத்தில் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானதொன்று. இந்த சொற்பத் தகவல்களைக் கூட தீவிரமான தேடல்களுக்குப் பிறகே அறிய முடிந்தது. ஆவணப்படுத்துதலில் நாம் எத்தனை பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கான அடையாளம் இது.
எஸ்.கணேசராஜ், பாரதிராஜாவின் பள்ளியில் திறம்பட தொழில் கற்றவர் என்பது ‘சின்னத்தாயி’ படத்தைப் பார்த்தால் நன்கு புரியும். இளம் காதலர்களின் பிரச்னைக்குப் பின்னால் ஒரு சமூகப் பிரச்னையைக் கிராமத்தின் பின்புலத்தில் அழுத்தமாக நகர்த்திச் செல்லும் பாணி, மிகுந்த அழகியலுடன் உருவாக்கப்படும் காட்சிகள், முத்தாய்ப்பான கிளைமாக்ஸ் என்று பாரதிராஜாவின் ஸ்டைலைச் சிறப்பாகப் பின்பற்றியிருந்தாலும் தன்னுடைய தனித்தன்மையையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் கணேசராஜ்.
கிராமத்தின் கொடை திருவிழா ஏற்பாடுகள், சுடலை மாட சாமியின் உக்கிரம் மற்றும் கனிவு, சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகள், மரபுகள் போன்றவற்றைக் கதையுடன் பின்னிப் பிணைந்து மண்ணின் வாசனையோடு காட்சிகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் கணேசராஜ். அதே சமயத்தில், ஆணாதிக்க உலகில், அவர்கள் இட்டு வைத்திருக்கும் அநியாயமான விதிகளினால் காலம் காலமாகப் பெண்கள் படும் பாட்டையும் உணர்ச்சிகரமாகப் பதிவு செய்திருக்கிறார்.
கிராமத்து மனிதர்கள் என்றாலே வெள்ளந்தியானவர்கள், அப்பாவிகள் என்பது போன்ற சித்திரம் நகரத்தில் படிந்துள்ளது. அதில் கணிசமான அளவு உண்மை இருந்தாலும் அதே கிராமங்களில்தான் சாதியக் கொடுமைகள், வன்முறைகள், வர்க்க வேறுபாடுகள் போன்ற பழமைவாதங்களும் ஆழமாக உறைந்துள்ளன. காம வெறி காரணமாக, ஓர் அபலைப் பெண்ணைக் கொடூரமாகக் கொன்று போடும் ஒரு ரவுடியின் குற்றத்தை, ஊர்க்கட்டுப்பாடு என்கிற பெயரில் மூடி மறைக்கும் அதே கிராமம்தான், பெண்களின் பரிதாபங்களைப் புரிந்து கொள்ள விரும்பாமல் ‘கற்பு’ என்கிற பெயரில் சாட்டையை எடுத்து அவர்களை விளாசுகிறது. இந்த முரணை மிக அழுத்தமான காட்சிகளின் வழியாக உணர்த்தியுள்ளார் கணேசராஜ்.
“ரேஷன் கார்டு, ரோடு வேணுமின்னா மட்டும் கவர்ட்மெண்ட் கிட்ட வர்றீங்க. ஆனா ஒரு கொலையை மட்டும் ஊர்க்கட்டுப்பாடு-ன்ற பெயர்ல மூடி மறைக்கறீங்க?” என்று இன்ஸ்பெக்டர் ராதாரவி கேட்கும் கேள்வியின் மூலம் கிராமத்தில் உள்ள அடித்தட்டு சமூகங்கள் எதிர்கொள்ளும் சாதிய வன்முறைகளின் அவலம் பதிவாகியிருக்கிறது.
சுடலை மாட சாமி காவல்தெய்வமாக ஆவேசத்துடன் ஊர்வலம் வரும் போது எதிரில் எதிர்ப்படுகிறவர்கள் எவராக இருந்தாலும் சாவைச் சந்திப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் மரண பயத்தையும் உதறி விட்டு சாமியை நேருக்கு நேராக எதிர்கொண்டு நீதி கேட்கிறார்கள் ராசம்மாவும் சின்னத்தாயியும். தலைமுறை மாறினாலும் பெண்களின் பிரச்னைகள் அப்படியேதான் இருக்கின்றன. சாமியாக மாறி வலம் வரும் பொன்ராசுவை வழிமறிக்கும் சின்னத்தாயி கேட்கிறாள். “நீங்க சாமியா, மனுசனான்னு எனக்குத் தெரியாது. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் வாழ வைக்கற எல்லா ஆம்பளையும் தெய்வம்தான்” என்று நீதி வேண்டி உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறாள். தெய்வம் அவளது குரலுக்குச் செவி சாய்த்ததா?
சண்டைக்காட்சிகள் முதற்கொண்டு ஆண் – உறவுச் சிக்கல்கள் வரை இந்தப் படத்தின் பல காட்டுக்கோர்வைகளை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக உயிர்ப்புடன் சித்திரித்துள்ளார் கணேசராஜ். விஸ்வம் நடராஜின் கேமரா அழகியலுடனும் நுண்ணுணர்வுடனும் இயங்கி காட்சிகளின் சிறப்பைக் கூட்டியுள்ளது.
கிராமத்துத் திரைப்படங்கள் என்கிற பெயரில் பழைமைவாதத்திற்கு துணை போகும் படைப்புகளே குவிந்திருக்கும் சூழலில் சமூக அநீதிக்கு எதிராக, குறிப்பாகப் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக உணர்ச்சிகரமாகவும் அழுத்தமாகவும் கேள்வி கேட்கும் இந்த ‘சின்னத்தாயி’கள் தமிழ் சினிமாவில் இன்னமும் அதிகமாகப் பெருக வேண்டும்.