இந்திய கால்பந்தாட்டத்தின் ‘சூப்பர் ஸ்டார்’ அரியணையை நீண்ட காலமாக ஆக்கிரமித்திருப்பவர் சுனில் சேத்ரி. சமகால இந்திய கால்பந்தின் அடையாளமே அவர்தான். அப்படிப்பட்ட ஒருவர் இன்னொரு வீரரை சுட்டிக்காட்டி இவர்தான் ‘சூப்பர் ஸ்டார்’ எனக் குறிப்பிட்டால், அந்த வீரரைப் பற்றிய நம்முடைய கற்பனைகள் எப்படி இருக்கும்? நிச்சயமாக சுனில் சேத்ரியை விட எல்லாவிதத்திலும் பெரிய இமேஜ் கொண்ட வீரரை மட்டுமே நாம் சிந்திப்போம். ஆனால், நிஜத்தில் அப்படியில்லை.
கல்லூரிப் பருவத்தைக் கடக்காத இளம் வீரரை, அதுவும் நம் தமிழகத்தைச் சேர்ந்த சிவசக்தியையே சேத்ரி `சூப்பர் ஸ்டார்’ என அடையாளப்படுத்தியிருக்கிறார். யார் இந்த சிவசக்தி? அவர் சுனில் சேத்ரியை எப்படிக் கவர்ந்தார்?
ஒரு மாதமாக நடைபெற்று வந்த டுராண்ட் கோப்பை தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்தத் தொடரை சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு FC அணி முதல் முறையாக வென்றிருக்கிறது. பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் தமிழக வீரர் சிவசக்தியே.
சுனில் சேத்ரி, ராய் கிருஷ்ணா, உதாண்டா போன்ற பெரிய ஃபார்வர்ட் வீரர்களைக் கொண்ட பெங்களூரு அணியில் அவர்களுடன் அட்டாக்கிங்கில் இறங்கி அவர்களை விட சிறப்பாக செயல்பட்டு 5 கோல்களை இந்தத் தொடரில் மட்டும் அடித்திருந்தார் சிவசக்தி. பெங்களூரு அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரராகவும் அவரே இருந்தார். சிவசக்தி அடித்த ஒவ்வொரு கோலுமே அணிக்குத் தேவையான மிக முக்கியமான தருணத்தில் வந்தவை.
குரூப் சுற்றில் மொஹமெதன் (Mohammedan) அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு FC ஒரு கோலை வாங்கி பின்தங்கியிருக்கும். ஏறக்குறைய ஆட்டம் முடிவை எட்டப்போகிற வரைக்குமே பெங்களூரு பின்தங்கியேதான் இருந்தது. இடையில் கேப்டன் சுனில் சேத்ரியே ஒரு அற்புதமான கோல் வாய்ப்பைத் தவறவிட்டிருப்பார். பெங்களூரு தோல்வியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இறுதியாகத்தான் அதிசயம் நிகழ்ந்தது. அதை நிகழ்த்தியவர் சிவசக்தி. சப்ஸ்டிடியூட்டாக உள்ளே வந்தவர் கூடுதல் நேரத்தில் ஒரு கார்னர் வாய்ப்பை பல இடர்களுக்கும் மத்தியில் சமயோஜிதமாக கோலாக மாற்றியிருப்பார். ஈக்குவலைசராக அமைந்த இந்த கோலால் போட்டி டிரா ஆனது. பெங்களூரு தோல்வியைத் தவிர்த்தது.
ஒடிசாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியிலுமே இரண்டு அணிகளும் கடைசி வரை கோலே அடிக்கவில்லை. கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. சப்ஸ்டிடியூட்டாக உள்ளே வந்திருந்த சிவசக்தி அந்தக் கூடுதல் நேரத்தில் ஒரு கோலை அடித்து பெங்களூருவின் அக்கவுன்ட்டை ஓப்பன் செய்திருப்பார். ராய் கிருஷ்ணா இன்னொரு கோலை அடிக்க அந்தப் போட்டியை பெங்களூரு அணி 2-1 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் கோல், ஈக்குவலைசர், கடைசி நிமிட கோல்கள் என சிவசக்தி அடித்த அத்தனை கோல்களுமே முக்கியமான தருணத்தில் வந்தவை. டுராண்ட் கோப்பையில் மும்பை சிட்டி FC க்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன்பாக பயிற்சியாளர் சைமன் கிரேசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அதிலும்,
கிரேசன் குறிப்பிட்டதைப் போன்றே இறுதிப்போட்டியிலும் ஒட்டுமொத்த அணியையும் மீண்டும் ஒரு முறை சிவசக்தி உற்சாகமடைய வைத்திருந்தார். மும்பைக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் தன்னைவிட எல்லாவிதத்திலும் திடகாத்திரமான வலுவான இரண்டு மும்பை வீரர்களுக்கிடையே புகுந்து லாகவமாக அவர்களை முறியடித்து, தடுப்பதற்காக முன்னேறி வந்த கோல் கீப்பரையும் ஏமாற்றி Far Post-ல் அந்த கோலை அடித்திருந்தார். சமயோஜிதமாக முன்னேறி கட்டுப்பாட்டோடு அவர் செய்த ஃபினிஷே அவரின் அலாதியான திறனை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது.
இத்தகைய ஆட்டங்களே அந்த அணியின் கேப்டனான சுனில் சேத்ரியை சிவசக்தியை `சூப்பர் ஸ்டார்’ என அழைக்க வைத்தது. மேலும், “சிவசக்தி மாதிரியான வீரர்கள் அணியில் இருக்கும்போது எப்போதும் வெற்றியே!” என மனமுவந்து பாராட்டியிருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே எல்லோருக்கும் ஒரு விளையாட்டு வீரரின் மீது தீவிர காதல் இருக்கும். அந்த வகையில் காரைக்குடி அருகே கண்டனூரில் பிறந்த சிவசக்திக்கு மிகவும் பிடித்த வீரர் சுனில் சேத்ரியே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு FC யின் B டீமுக்குத் தேர்வாகி, பெங்களூரு டிவிஷன் லீகில் சிறப்பாக செயல்பட்டு AFC கோப்பை தொடரில் பெங்களூருவின் சீனியர் அணிக்கு வந்த போது, சேத்ரியை நேரில் பார்ப்பதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதென சிவசக்தி கூறியிருந்தார். இன்று அதே சிவசக்தியை சேத்ரி ‘சூப்பர் ஸ்டார்’ என அடையாளப்படுத்துகிறார். எவ்வளவு பெரிய சாதனை இது!
சிவசக்தி குறித்து அவரை வார்த்தெடுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ராமன் விஜயன் அவர்களிடம் பேசினேன். பெருமிதத்தோடு பேசத்தொடங்கிய ராமன் விஜயன் அவர்கள், “சுனில் சேத்ரியே மிகப்பெரிய வீரர். அவர் அவ்வளவு சுலபமாகவெல்லாம் இன்னொரு வீரரை சூப்பர் ஸ்டார் என அடையாளப்படுத்திவிடமாட்டார். டுராண்ட் கோப்பையில் சிவசக்தியின் ஆட்டம் அத்தனை சிறப்பாக இருந்ததால் சேத்ரியே மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். 2012 வாக்கில் சிவசக்தி எங்களிடம் வந்த போது இயல்பான சிறுவனாகவே இருந்தான். மற்றவர்களுக்கு வழங்கக்கூடிய வழக்கமான பயிற்சிகளைத்தான் அவனுக்கும் வழங்கினோம். ஆனால், அவற்றையெல்லாம் அவன் உள்வாங்கிக் கொள்ளும் விதத்தில் வேறுபாடு இருந்தது.
அகாடமியின் போட்டிகளில் சிவசக்தி கோல் அடிக்காத ஆட்டமே இருக்காது. அப்போதிருந்தே அவர் ஒரு கோல் ஸ்கோரராகவே அறியப்பட்டார். பெங்களூரு அணியில் பெரிய வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் சிவசக்திக்கு வாய்ப்பு கிடைக்குமா, பெரும் வீரர்களுக்கு மத்தியில் இவர் என்ன செய்யப்போகிறார் போன்ற குழப்பங்கள் இருந்தன. ஆனால், பெங்களூரு FC க்காக சேத்ரி, ராய் கிருஷ்ணா இருவரை விடவும் சிவசக்திதான் அதிக கோல்களை அடித்திருக்கிறார். மற்ற வீரர்களை விட குறைவான நேரமே களத்தில் இருந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நானும் டுராண்ட் கோப்பை இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறேன். கோல்களும் அடித்திருக்கிறேன். ஆனால், அவற்றைவிட சிவசக்தி அடித்த கோல்களை நினைக்கும் போதே அதிக பெருமையாக இருக்கிறது.”
உள்ளூரிலிருந்து உலகத்தரத்தில் உருவாகி வளர்ந்து வரும் சிவசக்திக்கு நம்முடைய செய்தி இதுதான்.
‘உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது!’