சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக் – புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு ஏன்?!

பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஊழியர்கள் சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். முன்பு இந்த நிறுவன ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை அவர்கள் பார்க்கும் டெலிவரிக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்பட்டுவருகிறது. தற்போது அந்த நிறுவனம் பல புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இதில், ஊக்கத்தொகை முழுவதுமாக நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஸ்விக்கி ஊழியர்கள்

மேலும், ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை அந்த நிறுவனம் உணவு விநியோக பகுதிகளை மண்டலங்களாகப் பிரிந்திருக்கிறது. ஒரு சில மண்டலங்களில் மட்டும் இந்த புதிய நடைமுறையானது அமலுக்கு வந்திருக்கிறது. இந்த புதிய நடைமுறையை எதிர்த்தும், பழைய நடைமுறையைத் தொடரவேண்டும் என்று கடந்த செப்டம்பர் 19 முதல் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து ஸ்விக்கி ஊழியர்கள் ஒருவரிடம் பேசினோம், “முன்பிருந்த நடைமுறைப்படி, நாங்கள் ஒருநாளைக்கு எத்தனை டெலிவரி செய்கின்றோமோ, அதற்கு ஏற்ப எங்களுக்கு ஒவ்வொரு வாரமும் சம்பளத்துடன் ஊக்கத்தொகை கிடைக்கும். ஒவ்வொரு டெலிவரிக்கு, பெட்ரோல் செலவு போகக் குறைந்த அளவு மட்டுமே பணம் கிடைக்கும். ஆனால், டெலிவரி எண்ணிக்கை பொறுத்துக் கிடைக்கும் ஊக்கத்தொகை எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ஸ்விக்கி ஊழியர்கள்

முன்பெல்லாம், ஒரு மாதம் 40 ஆயிரம் வரை கிடைத்தது. இப்போது அந்தளவுக்கு ஊதியம் கிடைப்பதில்லை. படிப்படியாக எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பல சலுகைகள் குறைக்கப்பட்டன. இப்போது, மொத்தமாக ஊக்கத்தொகையை நிறுத்துவது எந்த வகையும் நியாயமானது கிடையாது. தற்போது பணி நேரமும் அதிகரித்துள்ளது.

இதன்படி, எங்களுக்கு வாரம் பெட்ரோல் செலவு, வாகன செலவு என அனைத்தும் போக ஐந்து முதல் ஏழாயிரம் வரை மட்டுமே கிடைக்கும். பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்திருக்கும் நிலையில், எங்களுக்கு டெலிவரிக்கு வழங்கப்படும் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய நடைமுறையை திரும்பப்பெற்று பழைய நடைமுறையைத் தொடரவேண்டும். கொரோனா, மழை, வெள்ளம் என அனைத்து காலகட்டத்திலும் நாங்கள் வேலை பார்த்திருக்கின்றோம். எங்களை எப்படி வஞ்சிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை” என்றார்.

இதுதொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சாதனமாக முடிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் நாங்கள் மீண்டும் 100 சதவிகிதம் சேவையைத் தொடங்கியுள்ளோம். தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ள சேவைக் கட்டணம் மற்றும் சம்பளம் ஊழியர்களுக்குச் சிறந்ததாக இருக்கிறது. எங்கள் உணவு விநியோக ஊழியர்கள்தான் எங்களின் முதுகெலும்பு” என்று கூறியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.