ஜெய்பூர்: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மிகப் பெரிய மாயாஜாலக்காரர் என்று ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் கிண்டலடித்துள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவரான ஜக்தீப் தன்கர் குடியரசு துணைத் தலைவரானதை அடுத்து அவருக்கு அம்மாநில தலைநகர் ஜெய்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் முதல்வர் அஷோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியரசு துணைத் தலைவராக ஆவதற்கு முன், ஜக்தீப் தன்கர் மேற்கு வங்க ஆளுநராக இருந்தார். அப்போது, அவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே தொடர் மோதல் இருந்து வந்தது. இந்த பின்னணியில் ஜக்தீப் தன்கர் தனது ஏற்புரையில் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேற்கு வங்க ஆளுநராக இருந்த காலங்களில், மம்தா பானர்ஜிக்கு எதிராக அவதூறாக ஒரு வார்த்தைகூட தான் பேசியதில்லை என தெரிவித்த ஜக்தீப் தன்கர், தனது செயல்கள் அனைத்தும் வெளிப்படையானதாகவும் எழுத்துபூர்வமானதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார். “அவர் (மம்தா பானர்ஜி) என்ன பேசினாலும், அவரது கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் தான் எந்த கருத்தையும் தெரிவித்ததில்லை” எனக் கூறிய ஜக்தீப் தன்கர், “உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள், அரசியல் சாசனத்திற்கு எதிராக நான் எதையாவது செய்துள்ளேனா என்று அவரிடமே கேட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுடன் 1989 முதல் தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதைக் குறிப்பிட்ட ஜக்தீப் தன்கர், மம்தா பானர்ஜியை சுமுகமாக எதிர்கொள்ள ஏதாவது மந்திரம் இருந்தால் கூறுங்கள் என்று அவரிடம் தான் உதவி கேட்டதாகவும் சிரித்துக்கொண்டே கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அஷோக் கெலாட், குடியரசு துணைத் தலைவர் தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் உங்களை எதிர்த்து வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததன் ரகசியம் என்ன என்று கேட்டார். என்ன மாஜிக் செய்தீர்கள் என்றும் அவர் வினவினார். தான் ஒரு மாயஜாலக்காரர் என்று கூறிக்கொண்ட அஷோக் கெலாட், என்னைவிட மிகப் பெரிய மாயாஜாலக்காரர் நீங்கள் என்று கிண்டலடித்தார்.
இதற்கு பதில் அளித்த ஜக்தீப் தன்கர், தான் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆட்சியாளர்கள் அரசியல் ரீதியில் ஒரு முடிவு எடுக்கும்போது, ஏன் அத்தகைய முடிவை எடுக்கிறார்கள், எந்த அடிப்படையில் முடிவு எடுக்கப்படுகிறது என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு தான் பார்ப்பதாக அவர் கூறினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 528 வாக்குகளைப் பெற்று ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். தன்கர் 74.36 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். கடந்த 25 ஆண்டுகளில், குடியரசு துணைத் தலைவர் பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.