ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கும் எடப்பாடி!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்

டெல்லி சென்று திரும்பியுள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து விட்டு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமித் ஷாவை மட்டும் சந்தித்து விட்டு எடப்பாடி பழனிசாமி தமிழகம் திரும்பியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாலும், முழுக்க முழுக்க அரசியலே பேசப்பட்டது என்கின்றன டெல்லி வட்டாரங்கள். அதிமுக உட்கட்சி பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதுடன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் பேசப்பட்டதாம். ஒற்றை தலைமை விவகாரத்தில் டெல்லி பாஜக தனக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களை பாஜகவுக்கு அளிக்கவும் எடப்பாடி பழனிசாமி முன்வந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடந்தால் அதன் வாக்கு வங்கி சிதறி நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதே டெல்லி பாஜக மேலிடத்தின் எண்ணமாக இருக்கிறது. இதனாலேயே, அதிமுகவில் எடப்பாடி தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு இன்னமும் க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை. எனவே, திமுகவை வீழ்த்தி அதிமுகவை வெற்றி பெற வைக்கும் பல்வேறு மூவ்களை செய்தால் மட்டுமே டெல்லியின் நம்பிக்கையை பெற முடியும் என்பதால், பல்வேறு திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தீட்டி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே, பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வந்துள்ள சாதகமான தீர்ப்பு அவருக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதே உற்சாகத்துடன், ஆளும்

அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார். நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று பாஜக கூறிவரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அரசுக்கு எதிராக மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் என தடாலடியாக இறங்கி அடித்து வருகிறார். தமிழ்நாட்டில் 4 முதல்வர்கள் இருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமியின் மூவ்கள் பற்றி பேசும் அவருக்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவின் பாணியை எடப்பாடியார் கையில் எடுத்துள்ளதாக குதூகலிக்கிறார்கள். “சபரீசன், துர்கா

, உதயநிதியின் கோலோச்சல்கள் ரியல் எஸ்டேட், தொழில்துறை, சினிமாத்துறை, ஒப்பந்தங்கள் என பணம் கொழிக்கும் துறைகளையும் தாண்டி அரசு நிர்வாகத்திலும் அதிகமாக இருக்கிறது. இதனை ஸ்மெல் செய்துள்ள எடப்பாடியார், இதற்கான ஆதாரங்களையும் திரட்டி கையில் வைத்துள்ளார்.

அத்துடன், திமுக குடும்ப உறுப்பினர்கள், பினாமிகளின் முதலீடுகளை பற்றி லிஸ்ட் எடுக்க தனி டீம் ஒன்றையும் அவர் அமைத்துள்ளார். அரசு துறைகளில் இருந்தும் அவருக்கு தகவல்கள் கிடைக்கின்றன. 2011 தேர்தலில் ஆட்சியை பிடிக்க ஜெயலலிதா இதே யுக்தியைதான் கையாண்டார். அந்த சமயத்தில் கருணாநிதி குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சுமத்திதான் அவர் வெற்றி பெற்றார். அதே பாணியைதான் எடப்பாடியாரும் எடுத்துள்ளார். வரும் காலங்களில் திமுகவினர் மீது ஆதாரத்தோடு பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைப்பார். எப்படியும் 2024 தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்” என்கின்றனர் நம்பிக்கையுடன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.