`ஜெர்ஸியைத் தவிர எதுவும் மாறல' – கேட்ச் ட்ராப்கள்; டெத் ஓவர் சொதப்பல்கள்; ஆஸியிடம் வீழ்ந்த இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ரொம்பவே எளிதாக 4 விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றிருக்கிறது.

ஆசியக்கோப்பைக்கும் இந்தத் தொடருக்கும் இடையில் இந்திய அணியின் ஜெர்ஸி மட்டும்தான் மாறியிருக்கிறதே தவிர வேறு எந்த மாற்றமும் அணியிடம் இல்லை. ஆசியக்கோப்பையில் எதிலெல்லாம் சொதப்பினார்களோ அதே விஷயங்களில் அப்படியே இங்கேயும் சொதப்பியிருக்கிறார்கள். 200+ ரன்களைச் சேர்த்தும் டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய ஏமாற்றமில்லை. ரோஹித்தும் கோலியும் சீக்கிரமே வெளியேறியிருந்தாலும் மற்ற வீரர்கள் நின்று அதிரடி காட்டினர். ஆசியக்கோப்பையில் கே.எல்.ராகுல் அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். “கோலியும் ஒரு ஓப்பனிங் ஆப்சன்தான், ஆனாலும் ராகுல்தான் என்னோடு ஓப்பனிங் இறங்குவார்” என ரோஹித் இந்தப் போட்டிக்கு முன்பாகப் பேசியிருந்தார்.

Rahul

தன் மீது அணியும் தன்னுடைய கேப்டனும் வைத்திருக்கும் நம்பிக்கையை ராகுல் காப்பாற்றியிருக்கிறார். 35 பந்துகளில் 55 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்.

ஹேசல்வுட், க்ரீன் ஆகியோரின் ஓவர்களில் ஸ்கொயர் லெக், மிட் விக்கெட் ஆகிய திசைகளில் ராகுல் அடித்த அடிகள் குதூகலத்தை உண்டாக்கின. அரைசதத்தைக் கடந்து ஹேசல்வுட்டின் பந்திலேயே ராகுல் அவுட்டும் ஆகியிருந்தார். ராகுல் கொடுத்த நல்ல தொடக்கத்தை அடுத்தடுத்த வீரர்களும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு சங்கிலித் தொடர் வினை போல ராகுலில் தொடங்கி அடுத்து சூர்யகுமார் அடுத்து ஹர்திக் பாண்டியா என மூவருமே ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். க்ரீன் வீசிய 20வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் ஹர்திக் சிக்ஸராக்கி இந்திய அணிக்கு ஒரு வெறித்தனமான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இந்திய அணி 208 ரன்களை எட்டியது. ஹர்திக் 30 பந்துகளில் 71 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

இதுவரை இந்திய அணி சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தது. டார்கெட்டை டிஃபெண்ட் செய்ய பந்தை கையில் எடுத்த சமயத்தில்தான் பிரச்னையே ஆரம்பித்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே லாங் ஆஃபில் பெரிய சிக்ஸராக்கியிருந்தார் ஃபின்ச்.

உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் புதிதாக ஓப்பனிங் இறங்கியிருந்த க்ரீன் தொடர்ந்து 4 பவுண்டரிகளை ஓடவிட்டார். புவி வீசிய அடுத்த ஓவரில் ஃபின்ச் 3 பவுண்டரிகளைச் சிதறவிட்டார். சரவெடி தொடக்கம்!

Green

பந்து கொஞ்சம் மூவ் ஆகியிருந்தால் கூட ஃபின்ச் திணறியிருப்பார். பிட்ச்சில் அதற்கு இடமே இல்லை. சுதாரித்துக் கொண்ட ரோஹித் நான்காவது ஓவரிலேயே அக்சர் படேலை அழைத்து வந்தார். அக்சர் படேல் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ஆங்கிள் இன் டெலிவரியில் ஃபின்ச்சை போல்டாக்கினார். ஃபின்ச் அவுட் ஆன பிறகும் க்ரீனின் அதிரடி ஓயவில்லை. லெக் சைடில் நான்கு ஃபீல்டர்கள் இருந்த போதும் மடக்கி மடக்கி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். ஆட்டம் இந்திய அணியின் கையை விட்டு சென்று கொண்டிருந்த சமயத்தில் இந்திய அணிக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது. 11, 12 இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மூன்றுமே முக்கியமான விக்கெட்டுகள். க்ரீனை அக்சர் படேல் வீழ்த்த, ஸ்மித்தையும் மேக்ஸ்வெல்லையும் உமேஷ் யாதவ் காலி செய்தார். 11-12 இந்த இரண்டே ஓவர்களில் மொமண்டம் இந்தியா பக்கமாகத் திரும்பியது. அதைத் தக்கவைத்துக் கொண்டு இந்திய அணியால் வெல்ல முடியவில்லை என்பதுதான் சோகம்.

ஆசியக்கோப்பையில் டெத் ஓவர்களில் இந்திய அணியின் பௌலிங் கடுமையாகச் சொதப்பியிருந்தது. அதே சொதப்பல்தான் இங்கேயும் அரங்கேறியிருந்தது.

Bhuvaneshwar Kumar

கடைசி 3.2 ஓவர்களில் மட்டும் 57 ரன்களை இந்திய பௌலர்கள் வாரி வழங்கியிருந்தனர். புவனேஷ்வர் குமார் 2 ஓவர்களில் 31 ரன்களையும் ஹர்சல் படேல் ஒரே ஓவரில் 22 ரன்களையும் அள்ளிக் கொடுத்திருந்தனர். மேத்யூ வேட் வெளுத்தெடுத்து விட்டார்.

ரேம்ப் ஷாட் ஆடுவாரென கீப்பருக்குப் பின்னே நேராக ஃபைன் லெக் ஃபீல்டரையெல்லாம் வைத்து கட்டம் கட்டி பார்த்தார் ரோஹித். ஆனால், வேடுக்கு அப்படிக் கொஞ்சம் மெனக்கெட்டு ஷாட் ஆட வேண்டிய தேவையெல்லாம் ஏற்படவில்லை. ரொம்பவே சுலபமாக வலைப்பயிற்சியில் ஆடுவதைப் போல ஆடி போட்டியை வென்று கொடுத்துவிட்டார். வேட் 21 பந்துகளில் 45 ரன்களுக்கு நாட் அவுட்டாக இருந்தார்.

பௌலிங் சொதப்பல்களைத் தாண்டி இந்திய அணியின் ஃபீல்டிங்கும் சுமாராகத்தான் இருந்தது. இந்திய அணி பேட்டிங் செய்த போது ஹர்சல் படேல் ஒரு பெரிய ஷாட்டை ஆடியிருந்தார். அடித்தவுடனே அது சிக்ஸர்தான் என யூகித்து ரன் ஓடாமலே நின்றிருந்தார். ஆனால், அதை பவுண்டரி லைனில் அசாத்தியமாக பாய்ந்து விழுந்து தடுத்திருந்தார் மேக்ஸ்வெல். ஹர்சல் ஒரே ஒரு ரன்னை மட்டுமே ஓடியிருந்தார். ஆக, இந்த ஒரு ஃபீல்டிங் பிரயத்தனத்தின் மூலம் மட்டும் மேக்ஸ்வெல் டார்கெட்டில் 5 ரன்களை அணிக்கு குறைத்துக் கொடுத்திருக்கிறார். இப்படியான அசாத்திய ஃபீல்டிங் முயற்சிகள் இந்திய அணியிடம் வெளிப்படவே இல்லை. மாறாக கேட்ச்களை ட்ராப் செய்து கொண்டிருந்தனர்.

க்ரீன், ஸ்மித், வேட் என முக்கியமான வீரர்களுக்கெல்லாமே கேட்ச்சை ட்ராப் செய்திருந்தார்கள். கோட்டைவிட்ட மூன்று கேட்ச்சில் ஒரு கேட்ச்சை சரியாகப் பிடித்திருந்தால் கூட போட்டியை இன்னும் நெருக்கமாகக் கொண்டு சென்றிருக்க முடியும்.

Bumrah and Bhuvaneshvar

பும்ரா வந்தால்தான் எல்லாம் மாறும் என ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், ஒரே ஒரு பௌலரை மட்டும் நம்பி உலகக்கோப்பையில் எதைச் சாதிக்க முடியும்? ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஆஸிக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளிலாவது அதைச் செய்து இந்திய அணி உலகக்கோப்பைக்கு தயாராகும் என நம்புவோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.