மதுரை: தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள்-1 தாள்-2 என 2 நிலையில் நடைபெறும். தாள்-1 ஸ்பீடு தேர்வாகவும், தாள் – 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வாகவும் நடைபெறும். கடந்த 75 ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தட்டச்சு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இளநிலை, முதுநிலை தேர்வில் தாள்- 1ல் ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர், தாள்-2ல் ஸ்பீடு தேர்வும் நடைபெறும் என தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய தேர்வு முறையை ரத்து செய்து பழைய தேர்வு முறையிலேயே தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பழைய முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதை ரத்து செய்து புதிய தேர்வு முறைப்படி தட்டச்சு நடத்தக் கோரி திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன் குமார் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அதில், கர்நாடகா, ஆந்திராவிலும் தட்டச்சு தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய தேர்வு முறை மாணவர்களுக்கு பலன் அளிக்கும். புதிய தேர்வு முறை அறிவிக்கப்பட்டதும் மாணவர்களை புதிய தேர்வு முறைக்கு தயார்படுத்தி வருகிறோம். மாணவர்களும் புதிய முறையில் தட்டச்சு தேர்வு எழுத தயாராக உள்ளனர். தனி நீதிபதி உத்தரவால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ‘தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக் கூடாது’ என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.