சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளதாக இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
வரவேற்பை பெற்ற டிரைலர்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. முன்னதாக வெளியான சோழா சோழா பாடலும், பொன்னி நதி பாடலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
ப்ரமோஷன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. இதற்காக ப்ரமோஷன் பணிகளில் படக்குழு மிகவும் தீவிரமாக இறங்கி உள்ளது. இதில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் தங்களின் ட்விட்டர் கணக்குகளில் ஆதித்த கரிகாலன், அருண் மொழி வர்மன், குந்தவை என தங்களின் கதாபாத்திர பெயரை வைத்துள்ளனர்.
தமிழில் அய்யோ
சென்னையில் சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இதில், மணிரத்னம், பார்த்திபன், ஜெயம் ரவி,த்ரிஷா, கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஒரு செய்தியாளர் டிரைலரில் பாலத்தின் மீது நடக்கும் சண்டையின் போது ஆழ்வார்க்கடியான் நம்பி தமிழில் அய்யோ என்றும் கத்துகிறார். ஆனால், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கில் நாராயணா.. என்று கத்துவது ஏன்? அந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.
நாராயணா… நாராயணா
நாராயணா இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்லவேண்டுமா? என நகைச்சுவையுடன் பதிலளிக்கத் தொடங்கிய மணிரத்னம், கவலைப்படாதீங்க படம் முழுக்க நாராயணா… நாராயணா..என சொல்லிக்கொண்டே இருப்பாரு. ஆனால், படத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது ஆனால், ஐந்து புத்தக நாவலை இரண்டு பாகமாக கொண்டுவரவேண்டும் என்றால், அதை மாற்றம் இல்லாமல் கொண்டுவரவே முடியாது.
ஒரு சில மாற்றம்
புத்தகத்தில் இருப்பதை அப்படியே கொண்டுவரவேண்டும் என்றால் அதை வெப் சீரிஸாகத்தான் எடுக்க முடியும். சினிமா என்பது ஒரு எக்கனாமிக் மீடியா, இதில் குறைவான நேரத்தில் எவ்வளவு சொல்ல முடியுமோ அதை சொல்ல வேண்டும். இதனால், இந்த படத்தில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். ஆனால், அதன் உள்நோக்கம் கல்கி எழுதியது போலத்தான் இருக்கும் என்றார்.