தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இணைய வழி மோசடியில் சிக்கி சுமார் 175 கோடி ரூபாயை பொதுமக்கள் பறிகொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மினி பினான்ஸ் என பல மோசடி குறு நிறுவனங்கள் ஆன்லைன் வழியே செயல்பட்டு வருகின்றன. சுமார் ரூ.5000 ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை உடனடியாக கடன் தருவதாகவும், அதை சுலபமாக இரண்டு மூன்று படிகளில் தருவதாகவும் கூறி லோன் கொடுக்கும் சூழல் இணையதள வழியில் அதிகரித்து கொண்டே வருகிறது.
மக்களும் பெரிய அலைச்சல் இல்லாமல் கிடைப்பதால் வாங்கி விட்டு பின் அவதிக்குள்ளாகும் நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். மேலும் அவர்கள் கொடுக்கும் ஒரு லிங்கை கிளிக் செய்துவிட்டாலே போதும், அது லோன் படிமங்களில் உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடுகின்றன. அதற்கு பிறகு அதை வேண்டாம் என்று சொன்னாலும் அந்த லோனை தொடர்ந்து செலுத்தி தான் ஆகவேண்டிய நிர்பந்தத்திற்குள் மக்கள் தள்ளப்படுகிறார்கள். அது ஒரு புறம் இருக்க பகிரங்கமாக வட்டியை சில பல காரணங்கள் கூறி அதிகரிக்கச் செய்து பணம் பறிக்கக் கூடிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த இணையதள ஆப்கள் மோசடியில் பொதுமக்கள் சுமார் ரூ.175 கோடிகள் வரை பறிகொடுத்திருப்பதாக தமிழக காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்த மாநில இணையதள குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின், இணையவழிகுற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இணைய வழி மோசடியில் 175 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மக்கள் பறிகொடுத்து இருப்பதாகவும், அதில் 33 கோடியே 45 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும், 9 கோடியே 8 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் 90% குற்றவாளிகள் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருப்பதால் பணத்தை மீட்பதற்கும், குற்றவாளிகளை நெருங்குவதிலும் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM