திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் தினந்தோறும் அங்கு விழாக்கோலம்தான். ஆனாலும் இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ பெருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா வரும் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட ரமணரெட்டி தலைமையில்் இன்று நடைபெற்றது. இதில் முக்கியமாக பக்தர்களின் வருகையையொட்டி திருமலையில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கீழ் திருப்பதியில் இருந்து திருமலை திருப்பதிக்கு வழக்கமாக இயக்கப்படுவதைவிட இரு மடங்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது பிரம்மோற்சவ நாட்களில் திருமலைக்கு நாள்தோறும் 350 பஸ்கள் இயக்கப்படும் என்று ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து திருமலைக்கு 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் எனவும், குறிப்பாக சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து தலா 40 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் எனவும் துறை அதிகாரிகள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
பிரம்மோற்சவ திருவிழா தொடக்க நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதிக்கு வருகை தரவுள்ளதால், நகரின் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என திருப்பதி நகராட்சி நிர்வாகத்துக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
TTD: திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்… அப்படி என்ன சிறப்பு?
மேலும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளில் 4 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கபடுவதால் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் போலீசாரையும், காதாரத் துறை அதிகாரிகளையும் ஆட்சியர் அட்வைஸ் செய்தார்.